ஆமை வேகத்தில் நடைபெறும் பஞ்சமாதேவி பாலப்பணிகள்


ஆமை வேகத்தில் நடைபெறும் பஞ்சமாதேவி பாலப்பணிகள்
x

பஞ்சமாதேவி சாலையில் நடைபெறும் பாலப்பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் ஆபத்தான பயணம் செய்து வருகின்றனர்.

கரூர்

பாலம் அமைக்கும் பணி

கரூரில் இருந்து நெரூர், சோமூர், செல்லிபாளையம், கோயம்பள்ளி, மறவாபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு ஐந்து ரோடு சென்று பஞ்சமாதேவி சாலை வழியாக தான் செல்ல வேண்டும். மேலும் அப்பகுதிகளை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து கரூருக்கு வருவதற்கு பஞ்சமாதேவி சாலையை தான் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் இந்த சாலை வழியாகத்தான் சென்று வருகின்றன.

இந்நிலையில் பஞ்சமாதேவி பகுதியில் மழைக்காலங்களில் பெய்யும் மழைநீர் சாலையோரம் உள்ள தாழ்வான பகுதிகளில் தேங்குவதால், மழைக்காலங்களில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் பஞ்சமாதேவி பகுதியில் மழைநீர் தேங்காமல் வழிந்தோடும் வகையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையின் குறுக்கே வெவ்வேறு இடங்களில் 3 தரைப்பாலங்களுடன் கூடிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கோரிக்கை

இப்பணியானது கடந்த பல மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சாலையின் ஒரு பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டு கான்கிரீட் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் சாலையின் மற்றொரு பகுதியை மட்டுமே வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் நிலை தடுமாறி விபத்துகள் ஏற்படும் சூழல் உள்ளது.

இதனால் அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பஞ்சமாதேவி சாலையில் அச்சத்துடனே பயணம் செய்து வருகின்றனர். இதனால் பஞ்சமாதேவி பகுதிகளில் நடைபெற்று வரும் பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story