அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு: தாய்க்கு மயக்க மருந்து கொடுத்து குழந்தை கடத்தல்
வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் தாய்க்கு மயக்க மருந்து கொடுத்து குழந்தை கடத்தப்பட்டது. அந்த குழந்தையை காஞ்சீபுரத்தில் மீட்ட போலீசார் இதுதொடர்பாக பெண் ஒருவரை கைது செய்தனர்.
வேலூர்,
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை சேர்ந்தவர் சுந்தர். இவரது மனைவி சூரியகலா. இவருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு கண்ணமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இவர் காது கேட்கும் திறன், வாய் பேசும்திறன் இல்லாதவர் என கூறப்படுகிறது.
3 குழந்தைகள் பிறந்ததால் கருத்தடை சிகிச்சைக்காக சூரியகலா வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். வார்டில் சூரியகலாவுடன் குழந்தையும் இருந்துள்ளது.
மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் உணவு இடைவேளை தவிர மற்ற நேரத்தில் நோயாளிகளின் உறவினர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. நோயாளிகளுக்கு உதவியாக பெண் ஒருவர் மட்டுமே வார்டில் உடன் இருக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
குழந்தை கடத்தல்
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சுமார் 5.30 மணிக்கு சூரியகலா இருந்த வார்டுக்கு ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த அய்யம்பேட்டைசேரியை சேர்ந்த பத்மா என்பவர் வந்தார். சூரியகலாவுடன் நெருங்கி பழகுவது போல் நடித்து, அவருக்கு மயக்க மருந்து கலந்த உணவை கொடுத்துள்ளார். அந்த உணவை சாப்பிட்ட சூரியகலா சிறிது நேரத்திலேயே மயக்கமாகிவிட்டார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சூரியகலாவின் ஆண் குழந்தையை பத்மா கடத்திக்கொண்டு தப்பிச் சென்று விட்டார். கண் விழித்து பார்த்தபோது குழந்தை காணாமல் போனதை அறிந்த சூரியகலா கதறி அழுது துடித்தார்.
இதுகுறித்து சூரியகலா மற்றும் உறவினர்கள் வேலூர் தாலுகா போலீசில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
4 தனிப்படை
இதனைத்தொடர்ந்து குழந்தையை கண்டுபிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
போலீசார் ஆஸ்பத்திரியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பத்மா குழந்தையை கடத்திக்கொண்டு வேக வேகமாக மருத்துவமனையில் இருந்து வெளியே செல்வது பதிவாகி இருந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, பத்மா திருவண்ணாமலை செல்லும் பஸ்சில் ஏறி தப்பிச் சென்றது தெரிந்தது.
பத்மா பயணம் செய்த வழித்தடங்களில் உள்ள அண்டை மாவட்டங்களில் பொருத்தப்பட்டிருந்த 500-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வுக்கு உட்படுத்தினர்.
காஞ்சீபுரத்தில் மீட்பு
கண்காணிப்பு கேமராவின் தொடர்ச்சியை வைத்து இறுதியாக 8 மணி நேரத்தில் காஞ்சீபுரத்தில் பத்மா இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அங்கு தனிப்படை போலீசார் விரைந்து சென்று பத்மாவை கைது செய்து குழந்தையை மீட்டனர். மேலும், குழந்தையை கடத்திய பத்மா மற்றும் அவரது கணவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தையை மீட்டது எப்படி?
குழந்தையை மீட்டது குறித்து வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) கிரண் ஸ்ருதி கூறியதாவது:-
குழந்தையை கடத்திய பெண் விட்டு சென்ற பையை சோதனை செய்தபோது அந்த பெண் ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் நகை அடமானம் வைத்த ரசீது இருந்தது. அந்த ரசீதில் இருந்த முகவரி, பெயர் மூலம் குழந்தையை கடத்திய பெண் காவேரிப்பாக்கத்தை சேர்ந்த பத்மா என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரின் புகைப்படம் காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட அண்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டு, இரவு ரோந்து போலீசார் பஸ், ரெயில் நிலையங்களில் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் குழந்தையுடன் பத்மா நிற்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். குழந்தையையும் மீட்டனர். பத்மாவின் 2-வது கணவர் ராஜா செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிடிபட்டார். பத்மா மற்றும் ராஜாவிடம் நடத்திய விசாரணையில், பத்மாவிற்கு முதல் கணவர் திருநாவுக்கரசு மூலம் ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். கடந்த சில மாதங்களாக பத்மா முதல் கணவரை பிரிந்து ராஜாவுடன் வாழ்ந்து வந்தார்.
ராஜா, பத்மாவுக்கு குழந்தை இல்லாத நிலையில், சில மாதங்களுக்கு முன்பு பத்மா கருவுற்றிருப்பதாக ராஜாவிடம் கூறி உள்ளார். மேலும் அவர் கடந்த 6 மாதங்களாக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக சென்றுள்ளார்.
இந்த நிலையில்தான் பத்மா நேற்று முன்தினம் தனக்கு குழந்தை பிறந்திருப்பதாகவும், தன்னை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றி இருப்பதாகவும், அங்கு பொருட்களை கொண்டு வருமாறு ராஜாவிடம் கூறியுள்ளார். இதையடுத்து அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து குழந்தையை பத்மா கடத்தி சென்றுள்ளார்.
ராஜா, பத்மா ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கடத்தப்பட்ட 8 மணி நேரத்தில் 5 மாவட்ட போலீசாரின் துரித நடவடிக்கையால் குழந்தை உடனடியாக மீட்கப்பட்டது.