முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா


முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா
x

முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா நடந்தது.

புதுக்கோட்டை

பொன்னமராவதி:

பொங்கல் விழா

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா கொன்னையூரில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பொங்கல் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதையொட்டி கடந்த மார்ச் மாதம் 19-ந் தேதி பூச்சொரிதல் விழாவும், 20-ந் தேதி காலை அக்னி பால்குட விழாவும் நடைபெற்றது. பின்பு 26-ந் தேதி அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டதை தொடர்ந்து, தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு அபிஷேக, ஆராதனையும், இரவில் முத்துமாரியம்மன் வீதியுலா மேளதாளங்கள் முழங்க, வாணவேடிக்கையுடனும் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கோவிலை சுற்றி தீப்பந்தம் பிடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நேற்று பொங்கல் விழாவை முன்னிட்டு நாடு செலுத்தும் விழா நடைபெற்றது. இதில் அதிகாலை முதலே கோவில் முன்பு பொங்கல் வைத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். பின்னர் நாடு செலுத்தும் விழாவில் பொன்னமராவதி, செவலூர், ஆலவயல், செம்பூதி ஆகிய நான்கு ஊர் நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சேறு பூசி வந்து நேர்த்திக்கடன்

இதில் பக்தர்கள் தங்கள் உடல் முழுவதும் சேறு பூசி, வெள்ளைமீசை வரைந்து, பல வண்ணங்களில் கலர்ப்பொடிகள் பூசிக் கொண்டு, கோழி இறகு சொருகி, பஞ்சுகள் ஒட்டிக்கொண்டு, ஈட்டி, வேல், கம்பு எடுத்துக் கொண்டும், மாறுவேடம் அணிந்தும், இளைஞர்கள் சிலம்பாட்டம் ஆடியபடியும், பெண்கள் கையில் வேப்பையிலை எடுத்துக் கொண்டு கோலாட்டம், கும்மியாட்டம், ஆண்கள் வைந்தானை ஆட்டம் ஆடியும் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பங்குனி வெயிலின் வெம்மையை தாங்கவும், மண் வளம் செழிக்கவும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும் வேண்டி அவர்கள் ஆலவயல் நாட்டில் இருந்து காலணியில்லாமல் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் அவர்கள் நடந்து வந்தனர்.

இந்த விழாவில் புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் பொன்னமராவதி தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் இருந்தனர். போலீசார் புறக்காவல் நிலையம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

================


Next Story