ஆரணி பஸ் நிலையங்களில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் அவதி


ஆரணி பஸ் நிலையங்களில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் அவதி
x

ஆரணியில் உள்ள பழைய, புதிய பஸ் நிலையங்களின் மூலம் நகராட்சிக்கு அதிக வருவாய் கிடைத்தும் பயணிகளுக்கு எந்தவித அடிப்படை வசதியும் செய்யப்படாததால் அவர்கள் சிரமத்துக்குள்ளாகும் நிலை தொடர்ந்து வருகிறது. அடிப்படை வசதிகள் இன்றி செயல்படும் அவலநிலை உள்ளது.

திருவண்ணாமலை



ஆரணியில் உள்ள பழைய, புதிய பஸ் நிலையங்களின் மூலம் நகராட்சிக்கு அதிக வருவாய் கிடைத்தும் பயணிகளுக்கு எந்தவித அடிப்படை வசதியும் செய்யப்படாததால் அவர்கள் சிரமத்துக்குள்ளாகும் நிலை தொடர்ந்து வருகிறது. அடிப்படை வசதிகள் இன்றி செயல்படும் அவலநிலை உள்ளது.

குடிநீர் இல்லை


திருவண்ணாமலை மாவட்டத்திலேயே வருவாய் மிக்க நகரமாக ஆரணி நகராட்சி விளங்கி வருகிறது. இங்கு வருவாய்மிக்க தொழிலாக நெல், அரிசி வியாபாரம், அரிசி உற்பத்தி, பட்டு சேலை தயாரிப்பு ஆகியவை பிரதான தொழிலாக உள்ளது. பல்வேறு மாவட்டங்களில்இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஆரணி நகருக்கு தினசரி ஆயிரக்கணக்கான வியாபாரிகள், மக்கள் வருகை தரும் வர்த்தக தலமாக ஆரணி திகழ்ந்து வருகிறது. ஆரணி நகரில் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் என 2 பஸ் நிலையங்கள் செயல்படுகின்றன. இரு பஸ் நிலையங்களிலும் உள்ள கடைகளில் போதிய விற்பனையாகாததால் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டே காணப்படுகிறது.

மேலும் பஸ் நிலைய வளாகங்களில் உள்ள கடைகளுக்கு முன்பு உள்ள இருக்கைகள் உடைக்கப்பட்டு பயணிகள் அமர்வதற்கு போதிய இடவசதி இல்லை. குடிநீர் வசதியை பொறுத்தவரை, இருக்கு ஆனால் இல்லை, என்பது போன்று குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் தண்ணீர் வருவதில்லை.

அடிப்படை வசதிகள்


மேலும் அடிப்படை வசதிகளில் முக்கியமானதாக கருதப்படும் இலவச கழிப்பறை வசதி கூட இல்லை. பஸ் நிலையங்களில் உள்ள கட்டண கழிப்பிடத்தில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் கூறப்படுகிறது. இதனால் பஸ் நிலைய வளாகத்தின் சில பகுதிகள் திறந்தவெளி கழிப்பிடமாக செயல்படும் அவல நிலையில் இருந்து வருகிறது.

கட்டண கழிப்பறையில் அதிகப்படியான கட்டணம் வசூலிக்கப்படுவதால் வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் ஆட்டோ நிறுத்தவும் போதிய இடவசதி இல்லை. சைக்கிள் நிறுத்தம் மட்டுமே ஆரணி நகராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

ஒருங்கிணைந்த பஸ் நிலையம்

புதிய பஸ் நிலைய வளாகத்தில் பயணிகள் அமர்வதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள இருக்கைகளில் கூட சிறு வியாபாரிகள் கடை விரித்து ஆக்கிரமிப்பு செய்து விடுகின்றனர். இதை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. ஆரணி நகராட்சியை பொறுத்தவரை 2 பஸ் நிலையங்களில் இருந்து வரும் வருவாயை மட்டும் பெற்றுக்கொள்கின்றனர். ஆனால் எந்தவித அடிப்படை வசதிகளையும் நகராட்சி நிர்வாகம் செய்து கொடுக்கவில்லை.

ஆரணியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்பட வேண்டும் ஆனால் ஆரணி நகரில் போதிய இட வசதி இல்லாததால் ஆரணி அருகாமையில் கிராமப்புற பகுதிகளுக்கு பஸ் நிலையம் சென்று விடும் என்பதனை கருத்தில் கொண்டு ஆரணி நகராட்சி நிர்வாகம் இதுவரை ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆரணி பஸ் நிலையத்தை அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய பஸ் நிலையமாக மாற்ற வேண்டும் என்பதே ஆரணி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. சமூக ஆர்வலர்களும் அதையே எதிர்பார்க்கின்றனர்.

இது தொடர்பாக ஆரணி ரியல் எஸ்டேட் அதிபரும், முன்னாள் மளிகை வியாபாரியுமான எம். ஏழுமலை கூறியதாவது:-


2 பஸ் நிலையங்களிலும் பொதுமக்கள், ஏழை- எளிய மக்கள் கட்டணமில்லா கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே ஆரணி நகராட்சி நிர்வாகம் கட்டணமில்லா கழிப்பறைகளை மாற்றியமைத்து நகராட்சி ஊழியர்களை கொண்டு தூய்மைப்படுத்தி நகராட்சிக்கு வருவாய் பெருக்க வேண்டும், ஆனால் அதை ஏலம் விட்டுவிட்டு வருவாய்க்காக மட்டுமே நகராட்சி நிர்வாகம் செயல்படுத்துகிறது. பஸ் நிலையத்திற்க்கான உரிய அங்கீகாரம் இல்லாத பஸ் நிலையமாகவே இதுநாள் வரை செயல்படுகிறது.

தொழில் வர்த்தக சங்க தலைவர் வி.கே.சர்மா:-


ஆரணியில் 2 பஸ் நிலையங்கள் இருந்தும் பொது மக்களுக்கு குடிநீர் வசதி இல்லை. வெளியூரிலிருந்து வரக்கூடிய பயணிகளை ஏற்றி செல்ல உரிய ஆட்டோ நிறுத்தமும் இல்லை. தூய்மை இல்லாத நகராட்சியாக ஆரணி செயல்படுகிறது, எங்கு பார்த்தாலும் குப்பை கூளங்களாகவே உள்ளது. எனவே பஸ் நிலைய வளாகத்திலேயே 2 தூய்மை பணியாளர்களை கொண்டு தொடர்ந்து தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆரணி பிரதான சாலையில் செயல்பட்டு வரும் அனைத்து தனியார் கடைகளிலும் கழிப்பறை வசதி இல்லாத நிலையில் ஒவ்வொரு கடை பெண் தொழிலாளர்களும் கட்டணம் செலுத்தி கழிப்பறைக்கு செல்கின்றனர். எனவே பஸ் நிலையங்களில் செயல்படும் கட்டண கழிப்பறைகளையும் இலவச கழிப்பறை நிலையங்களாக மாற்ற வேண்டும். கடைகளில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்களுக்கு ஆரணி நகராட்சி நிர்வாகம் உரிய வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.


Next Story