பேராவூரணி-பட்டுக்கோட்டை இடையே இரவு நேரத்தில் பஸ் வசதி - பொதுமக்கள்
பேராவூரணி-பட்டுக்கோட்டை இடையே இரவு நேரத்தில் பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
பேராவூரணி-பட்டுக்கோட்டை இடையே இரவு நேரத்தில் பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
பஸ் வசதி
தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் இருந்து இரவு 8 மணிக்குப்பிறகு பெரும்பாலான பகுதிகளுக்கு பஸ் வசதி இல்லை. குறிப்பாக பட்டுக்கோட்டைக்கு பஸ் வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
பேராவூரணி சட்டமன்ற தொகுதி பொருளாதார வளமை கொண்ட பகுதியாகும். இப்பகுதி மக்கள் பெரும்பாலும் விவசாயிகள் என்றாலும் பல நகரங்களுடன் வர்த்தக தொடர்பும் கொண்டுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதி கல்லூரிகளில் இந்த பகுதியை சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர்.
கொரோனாவுக்கு பிறகு...
கொரோனாவுக்கு பின்பு போக்குவரத்து குறைவான பகுதிகளுக்கு இயக்கப்படாமல் நிறுத்தப்பட்ட அரசு பஸ்கள் இதுவரை மீண்டும் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். வர்த்தக தொடர்பு, வேலைக்கு சென்று வர, தொழில் வளர்ச்சிக்கு வேண்டிய உபகரணங்கள் வாங்கி வர, குழந்தைகள் கல்வி தொடர்பான பயணங்கள் உள்ளிட்ட முக்கிய பயணங்களை மேற்கொள்வதில் இப்பகுதி மக்கள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர்.
இரவு 8 மணிக்கு மேல் பேராவூரணி பஸ் நிலையத்திலிருந்து பட்டுக்கோட்டைக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படாததால் பட்டுக்கோட்டை செல்ல வேண்டிய பயணிகள் ஆவணம் கைகாட்டி சென்று அங்கிருந்து பட்டுக்கோட்டை செல்ல வேண்டியுள்ளது.
செலவு ஏற்படுகிறது
25 கி.மீ. தூரத்தில் செல்ல வேண்டிய பயணத்திற்கு 50 கி.மீ. இரவு நேரத்தில் சுற்றிச்செல்ல வேண்டியுள்ளது. இதனால் காலவிரயமும் தேவையற்ற செலவீனமும் ஏற்படுகிறது என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
இரவு நேரத்தில் பஸ் வசதி இல்லாத நிலையில் பட்டுக்கோட்டை செல்பவர்கள் கூட சுற்றிச்சென்றுவிடுகின்றனர். ஆனால் இடையில் உள்ள கொன்றைக்காடு, காலகம் ஒட்டங்காடு, பாளத்தளி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்பவர்கள் ஆட்டோ பிடித்து செல்ல வேண்டி உள்ளது. அரசு பஸ்கள் இயக்கப்படாததால் தனியார் பஸ்களும் இயக்கப்படுவதில்லை.
இரவு நேரத்தில்...
எனவே பட்டுக்கோட்டைக்கு ஏற்கனவே இரவில் இயக்கப்பட்ட அனைத்து அரசு பஸ்களையும் இயக்காவிட்டாலும் இரவு 9 மணிக்கு ஒட்டங்காடு, பாளத்தளி வழியாக செல்லக்கூடிய பஸ்சை இயக்கினால் பொதுமக்களுக்கு சிரமங்கள் தீரும். அரசு போக்குவரத்து கழகத்திற்கும் வருமானம் கிடைக்கும்.
மேலும் பட்டுக்கோட்டையிலிருந்து இரவில் பேராவூரணி திரும்புபவர்களுக்கும் வசதியாக இருக்கும். எனவே உடனடியாக போக்குவரத்துக்கழகம் பேராவூரணி- பட்டுக்கோட்டை இடையே இரவு நேரத்தில் பஸ்சை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.