கருத்து கேட்பு கூட்டத்திற்கு வந்தவர்கள் அலைக்கழிப்பு: அலுவலர்களுடன் விவசாயிகள் கடும் வாக்குவாதம்


கருத்து கேட்பு கூட்டத்திற்கு வந்தவர்கள் அலைக்கழிப்பு: அலுவலர்களுடன் விவசாயிகள் கடும் வாக்குவாதம்
x

கருத்து கேட்பு கூட்டத் திற்கு வந்தவர்கள் அலைக்கழிக்கப் பட்டதால் அலுவலர்கள் விவசாயிகள் கடும் வாக்கு வாதத்தில் ஈடு பட்டனர். தொடர்ந்து நடந்த கூட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை கைவிட வலியுறுத்தப்பட்டது.

பெரம்பலூர்

கருத்து கேட்பு கூட்டம்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகாவில் உள்ள கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கத்திற்கு கிளை பாசன வாய்க்கால்கள் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக புஜங்கராயநல்லூர் உள்ளிட்ட கிராம விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை 11 மணியளவில் கலெக்டர் தலைமையில் நடைபெறுவதாக இருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து காத்து கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த அலுவலர்கள் கருத்து கேட்பு கூட்டம் பெரம்பலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடத்தப்படவுள்ளதாக தெரிவித்ததால் விவசாயிகள் அங்கு சென்றனர். ஆனால் அங்கு விவசாயிகள் அமருவதற்கு போதிய அளவு இடவசதி, இருக்கை வசதி இல்லை.

வாக்குவாதம்

கருத்து கேட்பு கூட்டம் அறிவித்த இடத்தில் அறிவித்த நேரத்தில் தொடங்கப்படாததால் விவசாயிகள் அலைக்கழிப்புக்கு ஆளாகி நீண்ட நேரம் காத்திருந்து கடும் அவதிக்குள்ளாகினர். கூட்டம் தொடங்கப்படாததால் விவசாயிகளுக்கும், ஆர்.டி.ஓ. அலுவலக அலுவலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கலெக்டர் அலுவலகத்திலேயே கூட்டம் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டதால் விவசாயிகள் ஆத்திரமடைந்தனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கருத்து கேட்பு கூட்டம் காலை 11 மணிக்கு கலெக்டா் அலுவலகத்தில் நடைபெறும் என்றனர். அங்கு சென்றால் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடைபெறவுள்ளது என்றனர். இங்கு வந்து பார்த்தால் நாங்கள் அமருவதற்கு போதிய இடவசதி, இருக்கை வசதி இல்லை. பின்னர் மீண்டும் கலெக்டர் அலுவலகத்திலேயே கருத்து கேட்பு கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கின்றனர். இதனால் நாங்கள் அலைக்கழிப்புக்கு ஆளாகி சிரமம் அடைந்துள்ளோம் என்றனர்.

திட்டத்தை கைவிட வேண்டும்

இதையடுத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தாமதமாக நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் புஜங்கராயநல்லூர் கிராம விவசாயிகள் எங்கள் கிராமத்தில் விவசாயத்திற்கு போதுமான அளவு தண்ணீர் வசதி உள்ளது. இதனால் எங்கள் கிராமத்தில் மருதையாறு நீர்த்தேக்கத்திற்கு கிளை வாய்க்கால்கள் அமைக்க நிலம் கையகப்படுத்த வேண்டாம். அந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


Next Story