மத்திய அரசின் மீது வீண் பழி சுமத்துவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் -அண்ணாமலை அறிக்கை


மத்திய அரசின் மீது வீண் பழி சுமத்துவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் -அண்ணாமலை அறிக்கை
x

மத்திய அரசின் மீது வீண் பழி சுமத்துவதை எக்காலத்திலும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை,

சி.ஏ.ஜி. அறிக்கையில் மத்திய அரசின் 7 விதமான ஊழல் அம்பலமாகி இருக்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். சி.ஏ.ஜி. அறிக்கையில் நெடுஞ்சாலை அமைப்பதில் செலவினங்கள் அதிகரித்துள்ளன என்றுதான் கூறியிருக்கிறதே தவிர, ஊழல், முறைகேடு, மோசடி அல்லது முதல்-அமைச்சர் சொன்ன துவாரகா விரைவு சாலை குறிப்பிட்ட நபர்களுக்கு ஒப்பந்தம் ஒதுக்கீடு என்பது போன்ற வார்த்தைகள் எந்த இடத்தில் இடம் பெற்றிருக்கிறது என்பதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்க வேண்டும்.

ஊழல் என்று கூறவில்லை

துவாரகா விரைவு சாலை அமைப்பதில் செலவினங்கள் அதிகரித்ததற்கு, வடிவமைப்பு திட்டங்களில் ஏற்பட்ட மாறுதல்தான் காரணம் என்று சி.ஏ.ஜி. அறிக்கையிலேயே குறிப்பிட்டு உள்ளார்கள். 14 வழிச்சாலையில் 8 வழி மேம்பாலமாகவும், 6 வழி விரைவுச்சாலையாகவும் மாற்றப்பட்டு உள்ளதால் செலவீனம் அதிகரித்துள்ளது என்பது சி.ஏ.ஜி. அறிக்கையிலேயே இருக்கிறது.

எதற்காக இந்த மாறுதல் என்பதுதான் சி.ஏ.ஜி. அறிக்கையின் கேள்வியே தவிர ஊழலோ, முறைகேடோ நடந்துள்ளது என்று அறிக்கையின் எந்த பக்கத்திலும் கூறப்படவில்லை.

மூலப்பொருட்கள் விலை உயர்வு

தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் சாலைகள் அமைக்க மூலப்பொருட்கள் கிடைப்பது தாமதம் ஆவதால், சாலை அமைக்கும் பணிகள் தாமதம் ஆகிறது என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் குற்றம்சாட்டினார். சாலை அமைப்பதற்கான மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசிடமும் கேட்டுக்கொண்டார்.

தமிழகத்தின் கனிம வளங்கள் கடத்தப்பட்டு, கேரளாவுக்கு அனுப்புவதில் தி.மு.க. அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பது பொது மக்களுக்கே தெரிந்த உண்மை. மாநில வளர்ச்சி பணிகளுக்கு உதவாமல் கனிம வளங்களை திருடிக்கொண்டிருப்பவர்கள் மீது முதல்-அமைச்சர் இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன?.

முதல்-அமைச்சரின் கடமை

சுங்கச்சாவடியில் ஊழல் நடந்திருப்பதாக கூறியிருக்கிறார் முதல்-அமைச்சர். சுங்கச்சாவடியில் என்ன ஊழல் நடந்திருக்கிறது என்பதை நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டியது முதல்-அமைச்சரின் கடமை

மாநகராட்சிக்கு சொந்தமான பூங்காவில் நிகழ்ச்சி நடத்த, மாநகராட்சி ஆணையரிடமே பணம் வசூலிக்கும் அவலத்தில், தமிழகத்தின் தலைநகரத்தை வைத்திருக்கும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும், கவுன்சிலர்களும், சுங்கச்சாவடிகளிலும் இதுபோல வசூலில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்றனரா?.

ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக போகிற போக்கில் முதல்-அமைச்சர் சொல்லியிருக்கிறார். ஒரே எண்ணில் பலரின் கணக்குகள் இணைக்கப்பட்டு இருந்தால் அதனை சரி செய்ய வேண்டிய பொறுப்பு மாநில அரசிடமும் உள்ளது.

மத்திய அரசு ஒரே எண்ணில் பல கணக்குகள் இணைப்பது போன்ற தொழில்நுட்ப குறைபாடுகள் மீண்டும் ஏற்படாமல் தடுக்க புதிய தொழில் நுட்பத்தை உறுதி செய்துள்ளது. ஆனால் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ள போலி கணக்குகளை சரி செய்ய வேண்டியது மாநில அரசுகளின் பொறுப்பு. அதனை செய்ய தவறிவிட்டு மத்திய அரசு ஊழல் என்று பேசி இருக்கிறார் முதல்-அமைச்சர்.

2ஜி ஊழல் குறித்த சி.ஏ.ஜி. அறிக்கையை அத்தனை எளிதாக நாட்டு மக்கள் மறந்து விட மாட்டார்கள். ஊழல், முறைகேடு, மோசடி, அரசுக்கு இழப்பு என்ற வார்த்தைகள் அனைத்தும் இருந்தது 2ஜி ஊழல் குறித்த சி.ஏ.ஜி. அறிக்கை.

எனவே பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசின் மீது வீண் பழி சுமத்துவதை எக்காலத்திலும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story