பர்கூர் மலையில் தேவர்மலை கிராமத்தில் கட்டப்பஞ்சாயத்து கொடுமை- போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்


பர்கூர் மலையில் தேவர்மலை கிராமத்தில் கட்டப்பஞ்சாயத்து கொடுமை- போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்
x

பர்கூர் மலையில் உள்ள தேவர்மலை கிராமத்தில் கட்டப்பஞ்சாயத்து கொடுமை நடந்து வருவதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு வழங்கப்பட்டு உள்ளது.

ஈரோடு

ஈரோடு

பர்கூர் மலையில் உள்ள தேவர்மலை கிராமத்தில் கட்டப்பஞ்சாயத்து கொடுமை நடந்து வருவதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு வழங்கப்பட்டு உள்ளது.

புகார் மனு

அந்தியூர் தாலுகாவுக்கு உள்பட்ட பர்கூர்மலையில் உள்ள தேவர் மலை கிராமம் ஆலாமரத்தூர் பகுதியை சேர்ந்தவர் கெலதி தம்படி. இவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார்.

அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-

எனது மகன் கே.முருகன், திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் கூலித்தொழிலாளியாக உள்ளார். இவர் கடந்த 2-2-2022 அன்று திருப்பூரில் எங்கள் உறவினராகிய ஒரு பெண்ணை பார்த்து பேசினார்.

கட்டப்பஞ்சாயத்து கொடுமை

அப்போது அந்த பெண்ணின் கணவர் அங்கு வந்து தகராறு செய்ததுடன், எனது மகனையும் உடன் இழுத்துச்சென்றார். பின்னர் எங்கள் கிராமத்தை சேர்ந்த சில நபர்களுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக கிராமத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் சென்று எனது மகனையும், அந்த பெண்ணையும் தேவர்மலைக்கு ஜீப்பில் கொண்டு வந்து எலச்சிபாளையம் பகுதிக்கு அழைத்து வந்தனர். அங்கன்வாடி மையம் அருகே 2 பேரின் கைகால்களை கட்டி தாக்கியும், உடலில் குளிர்ந்த தண்ணீரை ஊற்றியும் கொடுமை செய்தனர்.

இரவு முழுவதும் இந்த கொடுமை நடந்தது. எனது மகனை பார்க்க என்னையும், குடும்பத்தினரையும் அனுமதிக்காமல் கொலை மிரட்டல் விடுத்தனர். சம்பந்தப்பட்ட பெண்ணின் மீது களங்கம் சுமத்தினர். கட்டப்பஞ்சாயத்தை கூட்டி, ரூ.3 லட்சத்தை நான் பஞ்சாயத்துக்கு கட்டிவிட்டு, சம்பந்தப்பட்ட பெண்ணை எனது மகனுடன் அழைத்துச்செல்ல வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்கள். பஞ்சாயத்துக்கு கட்டுப்பட்டு நான் ரூ.3 லட்சத்தை வட்டிக்கு வாங்கி கடந்த 10-2-2022 அன்று தேவர்மலை மாரியம்மன் கோவில் அருகே நடந்த கட்டப்பஞ்சாயத்தில் கொடுத்தேன்.

நடவடிக்கை

கட்டப்பஞ்சாயத்து நடத்தி அந்த பெண் கொடுமை செய்யப்பட்டதால், 10 நாட்கள் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்றார். தற்போது அவரது தந்தையின் வீட்டில் வசித்து வருகிறார். எந்த தவறும் செய்யாத நானும், எனது மகனும் ரூ.3 லட்சத்தை வட்டிக்கு வாங்கி, கட்டப்பஞ்சாயத்து கும்பலிடம் கொடுத்து விட்டு கடனில் சிக்கித்தவிக்கிறோம். இதுபற்றி ஏற்கனவே போலீசில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு பாதிக்கப்பட்ட எனக்கு ரூ.3 லட்சத்தை பெற்றுத்தரவும், கட்டப்பஞ்சாயத்து நடத்தி மலைக்கிராம மக்களை கொடுமை செய்யும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி உள்ளார்.


Next Story