பேச்சிப்பாறை-கோதையாறு இடையே சாலையை சீரமைக்கக்கோரி மறியல் போராட்டம் 70 பெண்கள் உள்பட 160 பேர் கைது


பேச்சிப்பாறை-கோதையாறு இடையே சாலையை சீரமைக்கக்கோரி மறியல் போராட்டம் 70 பெண்கள் உள்பட 160 பேர் கைது
x
தினத்தந்தி 22 July 2023 7:15 PM GMT (Updated: 22 July 2023 7:15 PM GMT)

பேச்சிப்பாறை-கோதையாறு சாலையை சீரமைக்கக்கோரி மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 70 பெண்கள் உள்பட 160 பேரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

குலசேகரம்:

பேச்சிப்பாறை-கோதையாறு சாலையை சீரமைக்கக்கோரி மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 70 பெண்கள் உள்பட 160 பேரை போலீசார் கைது செய்தனர்.

படுமோசமான சாலை

பேச்சிப்பாறை சீரோ பாயிண்ட் சந்திப்பில் இருந்து கோதையாறுக்குச் செல்லும் 15 கி.மீ. தூர சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்கப்படாமல் உள்ளது.

இதனால் படுமோசமான இந்த சாலை வழியாக பயணம் செய்யும் மின்நிலைய ஊழியர்கள், அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள், பழங்குடியின மக்கள், வனத்துறையினர், பள்ளி மாணவ, மாணவிகள், கோதையாறு மார்க்கெட் பகுதி மக்கள், சுற்றுலா பயணிகள் என பல்வேறு தரப்பு மக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும் இந்த சாலை வழியாக செல்லும் அரசு பஸ்கள் அடிக்கடி பழுதாகி வருகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு மோசமான இந்த சாலையில் பஸ்களை இயக்க மாட்டோம் என பஸ் டிரைவர்கள் திடீரென போராட்டத்தில் குதித்தனர். பின்னர் போக்குவரத்துக்கழக நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் பஸ்களை இயக்க வைத்தது.

மறியல் போராட்டம்

இந்தநிலையில் பேச்சிப்பாறை-கோதையாறு சாலையை சீரமைக்க வலியுறுத்தியும், வனப்பகுதியில் அட்டகாசம் செய்து வரும் புலியை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரியும் நேற்று பேச்சிப்பாறை கடம்பன்மூடு சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

உடனே போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் குலசேகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானகி தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து செல்லவில்லை.

160 பேர் கைது

இதையடுத்து மறியலில் ஈடுபட்டதாக மாவட்ட செயலாளர் செல்லசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின் தாஸ், கடையல் பேரூராட்சி தலைவி ஜூலியட்சேகர், பேச்சிப்பாறை ஊராட்சி தலைவர் தேவதாஸ், குலசேகரம் வட்டார செயலாளர் விஸ்வம்பரன், வட்டாரக் குழு உறுப்பினர்கள் கணேசன், ஷாஜூ, தோட்ட தொழிலாளர் சங்க தலைவர் நடராஜன், கடையல் பேரூராட்சி கவுன்சிலர் ரெகுகாணி உள்பட 106 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 70 பெண்கள் அடங்குவர். இந்த போராட்டம் காரணமாக சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story