தூய்மையை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்பு
திருக்கோவிலூரில் தூய்மையை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
திருக்கோவிலூர்,
தமிழகம் முழுவதும் தூய்மை பணியை வலியுறுத்தும் வகையில் எனது குப்பை, எனது பொறுப்பு என்ற இயக்கம் செயல்படுத்தபட்டு வருகிறது. இதையொட்டி திருக்கோவிலூரில் தூய்மைக்கான மக்கள் இயக்க ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு திருக்கோவிலூர் நகரமன்ற தலைவர் டி.என்.முருகன் தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஆணையர் கீதா வரவேற்றார். இதில் நகரமன்ற துணை தலைவர் உமாமகேஸ்வரி குணா மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டு பிளாஸ்டிக் பொருட்களை அழிக்க வேண்டியதன் அவசியம் பற்றியும், மீண்டும் மஞ்சப்பையை பயன்படுத்துவதால் ஏற்படும் பயன்கள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர். இந்த ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று வந்தது. ஊர்வலத்தின் போது பொதுமக்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் மஞ்சப்பை வழங்கப்பட்டது. முன்னதாக தூய்மையை வலியுறுத்தும் வகையில் நகரமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் நகரமன்ற தலைவர் டி.என்.முருகன் தலைமையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.