குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவுக்காக போலீஸ் சீருடை போன்ற வேடங்கள் அணிய தடை.!


குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவுக்காக போலீஸ் சீருடை போன்ற வேடங்கள் அணிய தடை.!
x
தினத்தந்தி 14 Oct 2023 9:47 AM GMT (Updated: 14 Oct 2023 10:08 AM GMT)

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவுக்காக போலீஸ் மற்றும் போலீஸ் சீருடை போன்ற வேடங்கள் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கோவில் திருவிழாவின் போது, லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவது தனிச்சிறப்பு.

இந்த நிலையில், தசரா திருவிழாவில் வேடம் அணியும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அறிவுறுத்தியுள்ளார். போலீஸ் மற்றும் போலீஸ் சார்ந்த சீருடை போன்ற வேடங்கள் அணிய பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சாதிய அடையாளங்களுடன் பக்தர்கள் கோவிலுக்கு வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


Next Story