திருட்டு வழக்கில் சிக்கிய மாணவரை பொதுத்தேர்வு எழுத வைத்த போலீசார்
சாணார்பட்டி அருகே திருட்டு வழக்கில் சிக்கிய 10-ம் வகுப்பு மாணவரை போலீசார் பொதுத்தேர்வு எழுத வைத்தனர்.
சாணார்பட்டி அருகே அதிகாரிபட்டி வங்கமனூத்துவில் தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு 29-ந்தேதி மாலை 2 வாலிபர்கள் வந்தனர். அப்போது அவர்கள் 2 பேரும், ஆலயத்துக்குள் சென்று அங்கிருந்த உண்டியலை திருடிவிட்டு பின்பக்க வாசல் வழியாக ஓடினர். அங்கு ஏற்கனவே மோட்டார் சைக்கிளில் மற்றொரு வாலிபர் தயார் நிலையில் இருந்தார்.
இதற்கிடையே வாலிபர்கள் உண்டியலை திருடியதை பார்த்த அக்கம்பக்கத்தினர் கூச்சலிட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளுடன் நின்றிருந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார். உண்டியலை திருடிய 2 வாலிபர்களையும் பொதுமக்கள் மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அதிகாரிபட்டியை அடுத்த பெத்தயகவுண்டன்பட்டியை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 23) மற்றும் 16 வயது 10-ம் வகுப்பு மாணவன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமச்சந்திரனை கைது செய்தனர். மேலும் 10-ம் வகுப்பு மாணவருக்கு இன்று தேர்வு இருந்தது. இதை கருத்தில் கொண்டு அவரை தேர்வு எழுத போலீசார் அனுமதித்தனர். அதன்படி, அந்த மாணவர் நேற்று தேர்வு எழுதினார். பின்னர் அவரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். மேலும் இந்த மாணவர் ஏற்கனவே சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.