குற்ற செயல்களை தடுக்கும் வகையில் போலீசார் திடீர் சோதனை


குற்ற செயல்களை தடுக்கும் வகையில் போலீசார் திடீர் சோதனை
x

குற்ற செயல்களை தடுக்கும் வகையில் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் போலீசார் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

குற்ற செயல்களை தடுக்கும் வகையில் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் போலீசார் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.

போலீசார் ரோந்து

திருவண்ணாமலை நகரில் கடந்த 12-ந்தேதி அதிகாலையில் 2 ஏ.டி.எம். மையங்களிலும், போளூர் மற்றும் கலசபாக்கத்தில் தலா ஒரு ஏ.டி.எம். மையத்திலும் பணம் எடுக்கும் எந்திரங்களை வெல்டிங் எந்திரத்தின் மூலம் வெட்டி அதில் இருந்த சுமார் ரூ.73 லட்சத்தை மர்ம நபர்கள் அள்ளிச் சென்றனர். ஒரே நாள் இரவில் 4 ஏ.டி.எம். மையங்களில் நடந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இரவில் ரோந்து செல்லும் போலீசார் ஏ.டி.எம். மையங்களை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாகன சோதனை

மேலும் 24 மணி நேரமும் முக்கிய இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மாவட்டத்தில் 'ஸ்ட்ரோமிங்' ஆபரேஷன் நடைபெற்றது.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்திற்குள் உள்ளே வரக்கூடிய வாகனங்கள், வெளியே செல்லக்கூடிய வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் போலீசாரின் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனம், கனரக வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, உரிமம் மற்றும் ஓட்டுனர் உரிமம் உள்ளதா? என பரிசோதனை செய்யப்பட்டது. இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் பலர் வாகன உரிமம் வைத்திருக்கவில்லை. பின்னர் அந்த வாகனங்களை போலீசார் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். வாகன உரிமத்திற்கான சான்றிதழை காட்டிவிட்டு தங்களது வாகனத்தை எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டது. மேலும் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

தங்கும் விடுதிகள்

திருவண்ணாமலை மற்றும் மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகளிலும் போலீசார் சோதனை செய்தனர். அப்போது விடுதியில் தங்குபவர்களின் விவரங்களை பெற்று அறை கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும் விடுதியில் ஆவணங்கள் சரியாக பின்பற்றப்படுகிறதா? என்றும் ஆய்வு செய்தனர்.

856 வழக்குகள் பதிவு

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் மாவட்டம் முழுவதும் 700 போலீசார் இந்த ஆபரேஷனில் ஈடுபடுத்தப்பட்டனர். மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 856 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில 95 பேர் மதுகுடித்து விட்டு ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த சோதனையின் போது 2 சிறுவர்கள் மோட்டார் சைக்கிள் இயக்கியது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ரவுடிகள் நடமாட்டத்தை கண்காணிக்கவும் 91 தங்கும் விடுதிகளில் சோதனை செய்யப்பட்டது.

பழைய குற்றவாளிகள் 190 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் 24 பேர் குற்றசெயல்களில் ஈடுபட மாட்டோம் என பிரமாண பத்திரம் எழுதி கொடுத்தனர். 12 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story