அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு
அண்ணா பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நாகர்கோவில்:
அண்ணா பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அண்ணா பிறந்த நாள்
அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாகர்கோவில் வடசேரியில் உள்ள அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட செயலாளரும், மேயருமான மகேஷ் தலைமையில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் இ.என்.சங்கர், அருண் காந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க.
இதே போல குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு அமைப்புச் செயலாளர் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவை தலைவர் சேவியர் மனோகரன், தோவாளை யூனியன் தலைவர் சாந்தினி பகவதியப்பன், மாநகராட்சி கவுன்சிலர் அக்ஷயா கண்ணன், தொழிற்சங்க செயலாளர் சுகுமாரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், "தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி தொடங்கியதில் இருந்து நெய்யாக இருந்தாலும் சரி, எண்ணெய்யாக இருந்தாலும் சரி விலை ஏற்றுவதில் முதல்-அமைச்சருக்கு நிகர் எவரும் கிடையாது. ஏழை எளிய மக்கள் வாங்க முடியாத அளவுக்கு ஆவின் நெய் விலை ஏற்றப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்களை லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் மிரட்டி பாலை ஆவினுக்கு கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இதனால் ஏழை எளிய மக்களுக்கு எந்த வகையில் பால் கிடைக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது என்றார்.
அ.ம.மு.க., தி.க. நிர்வாகிகளும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
குளச்சல்
குளச்சலில் நடந்த அண்ணா பிறந்த நாள் விழாவுக்கு குளச்சல் நகர அ.தி.மு.க. செயலாளர் ஆண்ட்ரோஸ் தலைமை தாங்கினார். அவர் தலைமையில் அ.தி.மு.க.வினர் அண்ணாசிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் நகராட்சி கவுன்சிலர் ஆறுமுகராஜா, மாவட்ட மாணவர் அணி முன்னாள் செயலாளர் ரவீந்திர வர்ஷன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.