அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
மின்கட்டணம், விலைவாசி உயர்வை கண்டித்து திருவாரூரில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மின்கட்டணம்,விலைவாசி உயர்வை கண்டித்து திருவாரூரில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர், கழிவுநீர் இணைப்பு கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்து திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-அ.தி.மு.க. ஆட்சியில் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டது. மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்த 15-வது மாதத்திலேயே மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். சொத்துவரி 150 சதவீதமும், குடிநீர், கழிவுநீர் இணைப்புகளுக்கான வரியும் உயர்த்தப்படடுள்ளது. மின் கட்டணம், விலைவாசி உயர்வால் தமிழகத்தில் மக்கள் மிகவும் துன்பப்படுகிறார்கள்.
ரூ.1,000 வழங்கும் திட்டம்
அதி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம், திருமண உதவி திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மகளிருக்கு மானிய விலையிலான ஸ்கூட்டி வழங்கும் திட்டமும் நிறுத்தப்பட்டுள்ளது.தி.மு.க. ஆட்சிக்கு வந்து இதுவரை எந்த புதிய திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. அ.தி.மு.க. ஒதுக்கிய நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட திட்டங்களுக்கு திறப்பு விழா நடத்தி கொண்டிருக்கிறது. குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்த திட்டம் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் அமைப்பு செயலாளர்கள் கோபால், சிவாராஜமாணிக்கம், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வாசுகிராமன், மாவட்ட இளைஞர்கள், இளம் பெண்கள் பாசறை செயலாளர் கலியபெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.