பொங்கல் சிறப்பு ரெயில்கள்: சில நிமிடங்களில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள், பயணிகள் ஏமாற்றம்


பொங்கல் சிறப்பு ரெயில்கள்: சில நிமிடங்களில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள், பயணிகள் ஏமாற்றம்
x

பொங்கல் பண்டிகைக்காக இயக்கப்படும் சிறப்பு ரெயில்களுக்கான டிக்கெட் முன் பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முன் பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தன.

சென்னை,

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15 ஆம் தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊருக்கு சென்று கொண்டாடுவதை சென்னை உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதற்காக பொங்கல் பண்டிகையின் போது சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு கிளம்பி செல்கின்றனர். இதனால், ரெயில்கள், பேருந்துகளில் கூட்டம் அலைமோதும். பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்தது.

அதன்படி தாம்பரம்-நெல்லை (06021), நெல்லை - சென்னை எழும்பூர் (06022), தாம்பரம்-நாகர்கோவில் (06041), நாகர்கோவில் -தாம்பரம் (06042),திருநெல்வேலி (06057/06058) என மொத்தம் தென் மாவட்டங்களுக்கு மொத்தம் 5 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

தாம்பரம் -திருநெல்வேலி (06021) சிறப்பு ரயில் ஜனவரி 12ம் தேதி தாம்பரத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு மாறுநாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். மறுமார்க்கமாக ஜனவரி 13ம் தேதி திருநெல்வேலியில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06022) மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். மேலும் தாம்பரம்-நாகர்கோவில் சூப்பர் பாஸ்ட் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06041) ஜனவரி 13ம் தேதி தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும். அதன்பிறகு நாகர்கோவில்-தாம்பரம் சூப்பர் பாஸ்ட் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06042) மறுமார்க்கமாக ஜனவரி 16ம் தேதி மாலை 5.10 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆனால் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன. இதனால் பயணிகள் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இன்று டிக்கெட் புக் செய்ய முடியாதவர்கள் வரும் 11 ஆம் தேதி தட்கல் முறையில் டிக்கெட் புக் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story