குளச்சல் அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்களை நியமிக்க வேண்டும்


குளச்சல் அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்களை நியமிக்க வேண்டும்
x
தினத்தந்தி 30 Jun 2023 6:45 PM GMT (Updated: 30 Jun 2023 6:45 PM GMT)

குளச்சல் அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்களை நியமிக்க வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தி பேசினர்.

கன்னியாகுமரி

குளச்சல்,

குளச்சல் அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்களை நியமிக்க வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தி பேசினர்.

நகராட்சி கூட்டம்

குளச்சல் நகராட்சி சாதாரணக்கூட்டம் தலைவர் நசீர் தலைமையில் நடந்தது. ஆணையர் (பொறுப்பு) ஜெயந்தி, துணைத்தலைவர் ஷெர்லி பிளாரன்ஸ், சுகாதார அலுவலர் ஸ்டாலின் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்களின் விவரம் வருமாறு:-

பனிக்குருசு (தி.மு.க.):- கொட்டில்பாடு, வெட்டுமடை பகுதி சாலையோரங்களில் இறைச்சி கழிவுகளை வீசி விட்டு செல்கின்றனர். இதை தடுக்க வேண்டும்.

துணைத்தலைவர் ஷெர்லி பிளாரன்ஸ்:- ரீத்தாபுரம் பேரூராட்சி மக்கள், நம் நகராட்சி இயற்கை உரம் தயாரிக்கும் பகுதியில் குப்பைகளை கொட்டிவிட்டு செல்கின்றனர்.

ரகீம் (தி.மு.க.):- பயணியர் விடுதி சந்திப்பு டாஸ்மாக் கடை அருகே 2 தெருவிளக்குகள் போட வேண்டும்.

சாலையை சீரமைக்க வேண்டும்

ஷீலா ஜெயந்தி (தி.மு.க.):- சாஸ்தான்கரையில் இருந்து பரம்புவிளாகம் செல்லும் தைநத்தான் மண் சாலையை செப்பனிட வேண்டும்.

தலைவர்:- திட்ட நிதியில்தான் அந்த சாலையை செப்பனிட முடியும். திட்ட நிதி வந்ததும் சாலை சீரமைக்கப்படும்.

ஆறுமுகராஜா (அ.தி.மு.க.):- 24 வார்டுகளிலும் நாய் தொல்லை உள்ளது.

தலைவர்:- தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு வருகிறது.

ஆறுமுகராஜா:- புதிய பஸ் நிலையம் கட்டும் பணி குறித்து வரைப்படம் வைக்க வேண்டும்.

ரகீம்:- புதிய ஒப்பந்தக்காரர் பணிகளை சீராக செய்யவில்லை.

வினேஷ் (சுயேச்சை):- எனது வார்டில் சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.

தலைவர்:- ஜூலை மாதம் முதல் சீரான குடிநீர் கிடைக்கும்.

ஜாண்சன் (தி.மு.க.):- பூங்காவை விரிவாக்கம் செய்யக்கூடாது. மீன் பிடித்துறைமுகம் விரிவாக்கம் செய்யும்போது, இப்போது உள்ள பூங்காவும் பாதிக்கப்படும்.

அரசு மருத்துவமனை

ஷீலா ஜெயந்தி:- குளச்சல் அரசு மருத்துவமனையில் தேவையான டாக்டர்கள், ஊழியர்கள் இல்லை. எனவே, போதிய மருத்துவ ஊழியர்களை நியமிக்க அரசிடம் கேட்க வேண்டும்.

ஆறுமுகராஜா, ரகீம், அன்வர் சதாத்:- போதிய டாக்டர்களை நியமித்து மருத்துமனையை சீரமைக்க வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.


Next Story