பிரதமரை விமர்சிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை -அண்ணாமலை அறிக்கை
பிரதமர் மோடியை விமர்சிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை. காசியை போன்று ராமேஸ்வரம் விரைவில் மாறும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை,
தி.மு.க.வின் குடும்ப ஆட்சி பயிற்சி பாசறையில் வழக்கம்போல யாரோ எழுதிக் கொடுத்ததை பார்த்து, அதில் என்ன எழுதி இருக்கிறது என்றே தெரியாமல் கடகடவென்று ஒப்பித்துவிட்டு போய் இருக்கிறார் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
1964-ம் ஆண்டு புயலில் சீர்குலைந்த தனுஷ்கோடி நகரை சீரமைக்க பிரதமர் நரேந்திர மோடிதான் முதன்முதலாக முயற்சி எடுக்கிறார் என்பதை தெளிவாக ஒப்புக்கொள்கிறார் மு.க.ஸ்டாலின். 1964-ம் ஆண்டுக்கு பின்னர் பலமுறை மத்திய அரசில் அங்கம் வகித்த தி.மு.க., தமிழக மக்களின் பிரச்சினை குறித்து பேசவோ, செயல்படவோ நேரமில்லை என்பதை வெளிப்படையாக கூறியதற்கு நன்றி.
நீலிக்கண்ணீர்
2004-2014-ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் காங்கிரஸ் கூட்டணியில் பசையான துறைகளை வாங்கிக்கொண்டு நாள்தோறும் எம் மீனவ சகோதரர்கள் தாக்கப்பட்டபோதும், கொலை செய்யப்பட்டபோதும் உங்கள் நீலிக்கண்ணீரை எல்லாம் மக்கள் நம்பிய காலம் முடிந்துபோய்விட்டது.
மீனவ மக்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுப்போம். மீன்வளக் கல்லூரி அமைப்போம். குளிர்பதன கிடங்கு வசதி அமைப்போம் என உங்கள் வாக்குறுதிகளில் ஒன்றையாவது நிறைவேற்றினீர்களா?
காசியை போன்று உலகப்புகழ் பெறும்
பிரதமர் நரேந்திர மோடி கொடுத்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் முழுமையாக நிறைவேற்றி கொண்டிருக்கிறார். ராமேஸ்வரமும் காசியைப் போல விரைவில் உலகப் புகழ்பெற்ற தலம் ஆகும். வாக்குறுதி கொடுத்துவிட்டு மக்களை ஏமாற்ற அவர் தி.மு.க.காரர் அல்ல. அவரை விமர்சிக்க ஒரு தகுதி வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.