பிரதமர் மோடி இன்று சென்னை வருகை; 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு


பிரதமர் மோடி இன்று சென்னை வருகை; 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு
x
தினத்தந்தி 26 May 2022 12:28 AM GMT (Updated: 2022-05-26T08:24:35+05:30)

மத்திய அரசின் திட்ட பணிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று (வியாழக்கிழமை) சென்னை வருகிறார். இதையொட்டி 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

சென்னை,

மத்திய அரசு துறைகள் சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (வியாழக்கிழமை) பிரமாண்ட விழா நடைபெறுகிறது.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

சென்னை வருகிறார்

சென்னையில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார்.

சென்னை விமான நிலையத்துக்கு மாலை 5.10 மணிக்கு வரும் பிரதமர் மோடியை கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரவேற்கின்றனர்.

பின்னர் விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு செல்கிறார். வழிநெடுக அவருக்கு பா.ஜ.க.வினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

ரூ.31,400 கோடி

மேலும் மாற்று ஏற்பாடும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ். அடையார் வந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு அவர் செல்ல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

நேரு ஸ்டேடியத்துக்கு 5.45 மணிக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி அங்கு இரவு 7 மணி வரை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அந்த நிகழ்ச்சியில் ரூ.31,400 கோடி மதிப்பீட்டிலான 11 மக்கள் நலத்திட்டங்களை அவர் தொடங்கிவைத்து பேசுகிறார்.

நிகழ்ச்சிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

11 திட்டங்கள்

பிரதமர் மோடி 11 திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இதில் ரூ.2,900 கோடி மதிப்பிலான 5 நிறைவடைந்த திட்டங்களை அவர் தொடங்கிவைப்பதுடன் ரூ.28,500 கோடி மதிப்பிலான 6 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் செய்கிறார்.

பிரதமர் மோடி தொடங்கிவைக்கும் நிறைவடைந்த திட்டங்கள் வருமாறு:-

* பிரதம மந்திரி வீட்டு வசதி-நகர்ப்புறம் திட்டத்தில் சென்னையில் ரூ.116 கோடியில் அமைக்கப்பட்டு உள்ள 1,152 வீடுகள் திறப்பு.

* மதுரை-தேனி இடையே ரூ.500 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 75 கி.மீ. ரெயில் பாதை திட்டம்.

* தாம்பரம்-செங்கல்பட்டு இடையே ரூ.590 கோடியில் போடப்பட்டுள்ள 3-வது ரெயில் பாதை திட்டம்.

* எண்ணூர்-செங்கல்பட்டு இடையே ரூ.850 கோடியில் 115 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள இயற்கை எரிவாயு குழாய் திட்டம்.

* திருவள்ளூர்-பெங்களூரு இடையே 271 கி.மீ. தூரத்துக்கு ரூ.910 கோடியில் அமைக்கப்பட்டுள்ள இயற்கை எரிவாயு குழாய் திட்டம்.

அடிக்கல் நாட்டுதல்

இதைப்போல பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்படும் திட்டங்கள் வருமாறு:-

* சென்னை-பெங்களூரு இடையே 262 கி.மீ. தூரத்துக்கு ரூ.14,870 கோடியில் அதிவிரைவு சாலை அமைத்தல்.

* சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையே 21 கி.மீ. தூரத்துக்கு ரூ.5,850 கோடியில் 4 வழி சாலையுடன் கூடிய இரட்டை அடுக்கு மேம்பாலம் அமைத்தல்.

* தர்மபுரி-நேரலுரு இடையே 94 கி.மீ. தூரத்துக்கு ரூ.3,870 கோடியில் 4 வழி சாலை அமைத்தல்.

* சிதம்பரம்-மீன்சுருட்டி இடையே ரூ.720 கோடியில் 31 கி.மீ. தூரத்துக்கு நடைபாதையுடன் கூடிய இருவழி சாலை அமைத்தல்.

* சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5 ரெயில் நிலையங்களை ரூ.1,800 கோடியில் மேம்படுத்துதல்.

* சென்னையில் ரூ.1,400 கோடி மதிப்பில் பன்முக தளவாட பூங்கா அமைத்தல்.

முதல்-அமைச்சர் மனு

நிகழ்ச்சி முடிந்ததும் இன்று இரவே பிரதமர் டெல்லி திரும்புகிறார்.

சென்னை வரும் பிரதமரிடம் தமிழகம் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி மனு அளிப்பார் என்று கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி, இணை மந்திரி வி.கே.சிங், ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், பெட்ரோலியம் துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி, மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன்.

கர்நாடக, ஆந்திர முதல்-மந்திரிகள்

கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, ஆந்திர பிரதேச முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, எதிக்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எம்.பி.க்கள் விழாவில் பங்கேற்கின்றனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் செய்து உள்ளது.

பலத்த பாதுகாப்பு

பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் தெரிவித்து உள்ளார். 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். 5 கூடுதல் கமிஷனர்கள், 8 இணை கமிஷனர்கள், 29 துணை கமிஷனர்கள் மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. கமாண்டோ படை வீரர்கள், ஆயுதப்படை வீரர்களும் பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

சென்னை விமான நிலையம், ஐ.என்.எஸ். அடையார், நேரு உள்விளையாட்டு அரங்கம் ஆகிய பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது. நேரு உள்விளையாட்டு அரங்கம் உள்ள பெரியமேடு பகுதி பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள தங்கும் விடுதிகளில் சந்தேகத்திற்கிடமாக யாராவது தங்கி இருக்கிறார்களா என்று போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். சென்னையில் ரெயில், பஸ் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.

டிரோன்கள் பறக்க தடை

பிரதமர் செல்லும் இடங்களில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வெளி வாகனங்கள் பறக்க தடை செய்யப்பட்டுள்ளது. இவற்றை பறக்கவிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

பிரதமர் செல்லும் பகுதிகளில் உள்ள சாலைகளில் 10 அடிக்கு ஒரு போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுவார்கள். நேற்று மாலை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. பிரதமர் பயன்படுத்தும் குண்டு துளைக்காத கார்கள் விமானத்தில் சென்னை கொண்டுவரப்பட்டுள்ளன.


Next Story