விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசு


விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசு
x

போதைப்பொருள் இல்லாத இந்தியா திட்ட விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றிப் பெற்ற பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் அரவிந்த் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

போதைப்பொருள் இல்லாத இந்தியா திட்ட விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றிப் பெற்ற பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் அரவிந்த் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

பரிசு- சான்றிதழ்

குமரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நாகர்கோவில் புனித சிலுவை கல்லூரியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் கலந்து கொண்டு போதைப்பொருள் இல்லாத இந்தியா திட்ட விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

426 பேருக்கு...

குமரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையுடன் தன்னார்வ அமைப்புகளும் இணைந்து கடந்த அக்டோபர் மாதம் 29-ந் தேதி அன்று மார்த்தாண்டம் நேசமணி கிறிஸ்தவ கல்லூரியில் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, நினைவாற்றல் போட்டி, கட்டுரை போட்டி, வினாடி வினா, ரங்கோலி, குறும்படம், செய்கை நாடகம், விழிப்புணர்வு காணொலி என 9 வகையான விழிப்புணர்வு போட்டிகளானது 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 11 -ம் வகுப்பு முதல் 12 -ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், கல்லூரி அளவில் இளநிலை மற்றும் முதுநிலை பயிலும் மாணவ, மாணவிகள் ஒரு பிரிவாகவும் என நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த 98 மாணவ, மாணவிகளுக்கும், இதற்காக பணிபுரிந்த 163 ஆசிரியர்களுக்கும், 165 தொண்டு நிறுவனங்களைச் சார்ந்த தன்னார்வலர்களுக்கும் என மொத்தம் 426 பேருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

இன்றைய காலக்கட்டத்தில் போதைப்பொருட்கள் வெளியே தெரியாத அளவிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆதலால் தொண்டு நிறுவன தன்னார்வலர்கள் பள்ளி -கல்லூரி மாணவர்களிடையே அதிகமான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட சமூகநல அதிகாரி சரோஜினி. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி சகிலா பானு, அரசு போக்குவரத்துக்கழக துணை மேலாளர் (வணிகம்) ஜெரோலின், புனித சிலுவைக் கல்லூரி முதல்வர் சகாய செல்வி, தொண்டு நிறுவன தன்னார்வலர்கள், நாசா முக்த் பாரத் அபியான் முதன்மை தன்னார்வலர்கள் நெல்சன், அருள் ஜோதி, அருண்குமார் மற்றும் ஜாண் கண் மருத்துவமனை நிர்வாகி ஜான் சாமுவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story