பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு


பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
x

பள்ளி, கல்லூரிகள் அளவில் நடந்த மாணவ, மாணவிகளுக்கான பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் அரவிந்த் பரிசு வழங்கி பாராட்டினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

பள்ளி, கல்லூரிகள் அளவில் நடந்த மாணவ, மாணவிகளுக்கான பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் அரவிந்த் பரிசு வழங்கி பாராட்டினார்.

226 மனுக்கள்

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெற்றார்.

அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 226 பேர் கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர். அந்த கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு விரைவாக தீர்வு காண துறைசார்ந்த அதிகாரிகளுக்கு கலெக்டர் அரவிந்த் அறிவுறுத்தினார்.

மாணவ- மாணவிகளுக்கு பரிசு

பின்னர் கலைபண்பாட்டுத்துறை சார்பில் குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம், ஓவியம் போன்ற கலைகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக தலா ரூ.6 ஆயிரமும், இரண்டாம் பரிசாக தலா ரூ.4,500-ம், மூன்றாம் பரிசாக தலா ரூ.3,500-ம் என மொத்தம் ரூ.70 ஆயிரத்திற்கான காசோலையையும், பாராட்டு சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.

மேலும் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற பேச்சு போட்டியில் நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி இளங்கலைத் தமிழ் (இரண்டாம் ஆண்டு) மாணவி ஆதிரா முதல் பரிசையும், ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கல்லூரியில் இளங்கலை வணிகவியல் (இரண்டாம் ஆண்டு) மாணவி மந்திரா இரண்டாம் இடத்தையும், நாகர்கோவில் திருச்சிலுவைக் கல்லூரி இளங்கலை பொருளியல் (மூன்றாம் ஆண்டு) மாணவி மோட்ச அலங்காரி சில்வியா மூன்றாம் பரிசையும், டதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவி லீனஸ்ஷேரன் முதல் பரிசையும், குலசேகரம் அரசு உயர்நிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவி சபரிதா 2-ம் பரிசையும், கடியப்பட்டணம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு (கணித அறிவியல் பிரிவு) மாணவி அகாஷ்னி புரூட்ஷிபா மூன்றாம் பரிசையும் வென்றனர். இதில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், இரண்டாம் பரிசாக தலா ரூ.3 ஆயிரமும், மூன்றாம் பரிசாக தலா ரூ.2 ஆயிரமும், மேலும் ஆளுர் அரசு மேல்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவி சுகைனா பாத்திமாவிற்கும், மாராயபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 6-ம் வகுப்பு மாணவி ஆலின் ஷானிகா ஆகியோருக்கு சிறப்பு பரிசுத்தொகையாக தலா ரூ.2 ஆயிரம் என மொத்தம் ரூ.24 ஆயிரத்திற்கான காசோலையையும், சான்றிதழ்களையும் கலெக்டர் அரவிந்த் வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திருப்பதி, உதவி இயக்குனர் (கலை பண்பாட்டுத்துறை) கோபால கிருஷ்ணன், உதவி இயக்குனர் (தமிழ் வளர்ச்சித்துறை) ரெசினாள் மேரி மற்றும் அனைத்துத்துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story