பழனி நகராட்சியில் சொத்து வரி உயர்வு தீர்மானம் நிறைவேற்றம்


பழனி நகராட்சியில் சொத்து வரி உயர்வு தீர்மானம் நிறைவேற்றம்
x

பழனி நகராட்சியில் சொத்து வரி உயர்வு தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திண்டுக்கல்

பழனி:

பழனி நகராட்சி அலுவலகத்தில் சொத்துவரி உயர்வு தொடர்பான அவசர கூட்டம் நடந்தது. இதற்கு நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளை சேர்ந்த அனைத்து கவுன்சிலர்களும் கலந்துகொண்டனர். கூட்டத்தில் சொத்துவரி உயர்வு தொடர்பான தீர்மானம் முன்மொழியப்பட்டது. இதனை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த நகராட்சி துணைத்தலைவர் கந்தசாமி சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார்.

இதற்கு தி.மு.க. கவுன்சிலர்கள் எழுந்து, நகராட்சி துணைத்தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மக்களை பாதிக்கும்‌ திட்டமாக இருந்தால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எதிர்க்கும் என்று துணைத்தலைவர் கூறினார். இதையடுத்து பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கடும் பாதிக்கும் வகையில் சொத்து வரி உயர்வு தீர்மானத்தை நிறைவேற்ற கூடாது என அ.தி.மு.க. கவுன்சிலர் முருகானந்தம் மற்றும் அக்கட்சியை சேர்ந்த மற்ற கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே சொத்து வரி உயர்வு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தலைவர் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து பழனி கோவில் சார்பில் நகராட்சிக்கு கட்டவேண்டிய ரூ.5 கோடி வரிபாக்கியை வசூலிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். வரியை கட்டவில்லையென்றால் கோவிலுக்கு செல்லும் குடிநீர் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து விரைவில் கோவில் சார்பில் செலுத்தவேண்டிய வரியை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையாளர் கமலா உறுதியளித்தார். இதையடுத்து நகராட்சி கூட்டம் நிறைவடைந்தது.


Next Story