ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற த.மு.மு.க.வினர்- போலீசார் இடையே தள்ளு, முள்ளு


ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற   த.மு.மு.க.வினர்- போலீசார் இடையே தள்ளு, முள்ளு
x

ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற த.மு.மு.க.வினர்- போலீசார் இடையே தள்ளு, முள்ளு நடந்தது.

திருவாரூர்

திருவாரூர் அருகே ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற த.மு.மு.க.வினர், போலீசார் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ரெயில் மறியல் போராட்டம்

நபிகள் நாயம் பற்றி அவதூறாக பேசிய பா.ஜனதா கட்சி முன்னாள் நிர்வாகிகள் நுபுல் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோரை கண்டித்தும், அவர்களை கைது செய்யக்கோரியும் த.மு.மு.க. அடியக்கமங்கலம் கிளை சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி இன்று காரைக்காலில் இருந்து எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறிப்பதற்காக த.மு.மு.க.வினர் புதுக்காலனி பள்ளிவாசலில் இருந்து பேரணியாக புறப்பட்டு அடியக்கமங்கலம் ரெயில் நிலையத்தை அடைந்தனர்.

முன்னதாக ரெயில் நிலையம் மற்றும் ரெயில்வே கேட் செல்லும் வழிகளை போலீசார் தடுப்பு கொண்டு அடைத்து இருந்தனர். மேலும் அங்கு போலீசார், ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த துப்பாக்கி ஏந்திய போலீசார் என நூற்றுக்கணக்கானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தள்ளு, முள்ளு

போராட்டத்துக்கு த.மு.மு.க. மாவட்ட செயலாளர் நவாஸ் தலைமை தாங்கினார். மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் குத்புதீன் முன்னிலை வகித்தார். இதில் த.மு.மு.க. கிளை செயலாளர் நூருல்லா, கிளை தலைவர் சையது இப்ராகீம், ஒன்றிய செயலாளர் பாபா பகுருதீன் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

தண்டவாள பாதையிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் சிலர் திடீரென ரெயில்வே தண்டவாள பாதைக்கு வர முயன்றனர். இதனையடுத்து போலீசார் அவர்களை தடுத்த போது லேசான தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதேபோல் அந்த பகுதியில் உள்ள ரெயில் பாதையில் பல இடங்களிலும் தள்ளு, முள்ளு நடந்தது. இதனிடையே சரக்கு ரெயில், மும்பை- காரைக்கால் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் என தொடர்ந்து ரெயில்கள் சென்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அமைதி பேச்சுவார்த்தை

போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் திடீரென தடைகளை மீறி ரெயில் மறியலில் ஈட முயன்றனர். அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. அப்போது போலீசார் தடைகளை மீற முயன்றவரை தாக்கியதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து போலீசார் அமைதி பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த ரெயில் மறியல் போராட்டத்தினால் அந்த பகுதி ஒரு மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.


Next Story