காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல்


காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல்
x

காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

வேப்பந்தட்டை:

சாலை மறியல்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள மேட்டுச்சேரி கிராமத்தில் கிணறு மூலம் குடிநீர் வினியோகம் நடைபெற்று வருகிறது. இந்த கிணற்று நீரில் உவர்ப்பு தன்மை அதிகமாக இருப்பதால் கல்லாற்றில் இருந்து குழாய் மூலம் குடிநீர் வினியோகிக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து கல்லாற்றில் இருந்து குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணி கடந்த சில நாட்களாக ஆமை வேகத்தில் நடப்பதாக கூறி, நேற்று அந்த பகுதி மக்கள் வி.களத்தூர்- வேப்பந்தட்டை சாலையில் மேட்டுச்சேரி பஸ் நிறுத்தம் அருகே காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் பிரபு மற்றும் வி.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

அப்போது விரைவில் குழாய் பதிக்கும் பணி நிறைவடைந்தவுடன் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியலால் வேப்பந்தட்டை- வி.களத்தூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story