காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்


காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்
x

விருத்தாசலத்தில் சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்

விருத்தாசலம்

குடிநீரில் கழிவுநீர் கலப்பு

விருத்தாசலம் லூக்காஸ் தெருவில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு சக்தி நகர் பகுதியில் இருந்து ஆழ்துளை மின் மோட்டார் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக இப்பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக தெரிகிறது. இதனால் குடிநீரில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால், இதை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் கண்டுகொள்ளவில்லை.

போராட்டம்

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் காலிகுடங்கள் மற்றும் கழிவுநீர் கலந்த குடிநீரை குடம், பாத்திரங்கள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களில் பிடித்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் எங்கள் பகுதிக்கு வரும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. குடிநீரில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால், அதை வாயில் கூட வைக்க முடியாத நிலை உள்ளது.

மேலும் தண்ணீரில் பூச்சி, புழுக்கள் மிதிக்கின்றன. எனவே, சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்ய நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். பின்னர் அசம்பாவிதம் நிகழ்வதற்கு முன்பு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு குடியேறும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறிவிட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story