ஓரியூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம்: 58 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சம் நலத்திட்ட உதவிகள்


ஓரியூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம்: 58 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சம் நலத்திட்ட உதவிகள்
x

ஓரியூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 58 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஓரியூர் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு தங்களது துறை சார்ந்து செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்ததுடன் பொதுமக்களிடமிருந்து 111 மனுக்களை பெற்றுக்கொண்டனர். இம்முகாமிற்காக ஏற்கனவே பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 79 மனுக்கள் பெறப்பட்டு, 67 மனுக்கள் ஏற்கப்பட்டும், 12 மனுக்கள் விசாரணைக்குப்பின் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, 6 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பில் மாற்றுத்திறனாளி மாதாந்திர ஓய்வூதிய உதவித்தொகைகளும், 10 பேருக்கு ரூ.1 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பில் விதவை மற்றும் முதியோர் மாதாந்திர ஓய்வூதிய உதவித்தொகைகளும், 3 பேருக்கு ரூ.26 ஆயிரம் மதிப்பில் திருமண உதவித்தொகைகளும், வருவாய்த்துறை சார்பில் 18 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணைகளும், கூட்டுறவுத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 34 ஆயிரத்து 360 பயிர்கடன்களும் என மொத்தம் 58 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சத்து 2 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வழங்கினார்.


Next Story