சட்டவிரோத மது விற்பனையை தடுக்கக்கோரி பொதுமக்கள் மறியல்


சட்டவிரோத மது விற்பனையை தடுக்கக்கோரி பொதுமக்கள் மறியல்
x

சட்டவிரோத மது விற்பனையை தடுக்கக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

வேப்பந்தட்டை:

24 மணி நேரமும் மது விற்பனை

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூர் பேரூராட்சியாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அங்குள்ள பாலக்கரை பகுதியில் 2 அரசு மதுபான கடைகள் இருந்தன. அப்போது, கோவில் மற்றும் பள்ளிக்கூடம் அருகில் இருப்பதை காரணம் காட்டி அங்குள்ள மதுபான கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து டாஸ்மாக் நிர்வாகம் அரும்பாவூரில் இருந்த 2 மதுபான கடைகளையும் மூடிவிட்டது. பின்னர் ஊருக்கு அருகில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத இடத்தில் மதுபான கடைகளை திறக்காமல் இருந்தனர். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி சில அரசியல்வாதிகள் அரும்பாவூரில் உள்ள அனைத்து வார்டு பகுதிகளிலும் சட்ட விரோதமாக சுமார் 20-க்கும் மேற்பட்ட சந்து கடைகளை திறந்து, 24 மணி நேரமும் மதுபானங்களை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் குடும்ப பெண்கள் பலரும் பெரிதும் பாதிப்பு அடைகின்றனர்.

சாலை மறியல்

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலை அரும்பாவூர் பாலக்கரையில் திரண்டு திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, தமிழக அரசு மற்றும் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்து, அரும்பாவூர் பகுதியில் மது விற்பனைக்கான சந்து கடை இல்லாமல் முற்றிலும் ஒழிக்க வேண்டும். 24 மணி நேரமும் மதுபானம் கிடைப்பதால் மதுபான பிரியர்கள் எந்த நேரமும் மது பாட்டில்களை வாங்கி குடித்துவிட்டு குடும்பத்தில் தகராறில் ஈடுபடுகின்றனர். எனவே மதுபான கடையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும், என்று கோரிக்கை விடுத்தனர்.

இதனை தொடர்ந்து அரும்பாவூர் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விரைவில் சந்து கடைகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அரும்பாவூர்- பெரம்பலூர் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story