புதுச்சேரியில் வெடிகுண்டு வீசி பா.ஜ.க. பிரமுகர் கொலை; திருச்சி கோர்ட்டில் 7 பேர் சரண்
புதுச்சேரியில் பா.ஜ.க. பிரமுகர் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 7 பேர் திருச்சி கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
பா.ஜ.க. பிரமுகர்
புதுச்சேரி மாநிலம் கணுவாப்பேட்டையை சேர்ந்தவர் ரங்கசாமி. ஆசிரியர். இவரது மகன் செந்தில்குமரன் (வயது 46). பா.ஜ.க. பிரமுகரான இவர், மங்கலம் தொகுதி பொறுப்பாளராக இருந்தார். புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர் ஆவார்.நேற்றுமுன்தினம் இரவு மங்கலம் தொகுதி அரியூரில் நடந்த பா.ஜ.க. கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு வில்லியனூரில் உள்ள தனியார் பேக்கரி கடையில் டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு 3 மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்தவாறு 9 பேர் கொண்ட கும்பல் வந்தது.
வெடிகுண்டு வீச்சு
பின்னர் அவர்கள் திடீரென நாட்டு வெடிகுண்டை செந்தில்குமரன் மீது வீசினர். அந்த குண்டு செந்தில்குமரனின் அருகில் விழுந்து வெடித்தது. இதனால் சுதாரித்து கொண்ட செந்தில்குமரன் அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனால் அதற்குள் அந்த கும்பல் மற்றொரு நாட்டு வெடிகுண்டை தூக்கி வீசியது. அந்த வெடிகுண்டு அவரமேல் விழுந்து பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது.
வெடிகுண்டு வீச்சில் நிலைகுலைந்து கீழே சரிந்த அவரை அக்கும்பல் சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் முகம் சிதைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் அவர் துடிதுடித்து இறந்தார். அவர் இறந்ததை உறுதி செய்த கும்பல் கொலைவெறியுடன் அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றது. இந்த படுகொலை சம்பவம் அங்கு பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவானது. அந்த சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
விரோதம்
மேலும் சம்பவம் தொடர்பாக வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், செந்தில்குமரனும், திருக்காஞ்சியை சேர்ந்த பிரபல ரவுடி நித்தியானந்தமும் நண்பர்களாக இருந்துள்ளனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு நிலப்பிரச்சினை தொடர்பாக இருவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. இதனால் பிரிந்த இவர்கள் தனித்தனி கோஷ்டியாக செயல்பட்டு வந்தனர். அவ்வப்போது இரு தரப்பினரும் மோதிக் கொண்டதாக தெரிகிறது.
ஒரு கட்டத்தில் பகை முற்றவே செந்தில்குமரனை தீர்த்துகட்ட திட்டமிட்ட நித்தியானந்தம் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அவரது நடமாட்டத்தை கண்காணித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில்தான் நேற்று முன்தினம் பேக்கரி கடையில் டீ குடித்து கொண்டிருந்தபோது வெடிகுண்டு வீசியும்,வெட்டியும் செந்தில்குமரன் கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து ரவுடி நித்தியானந்தம் மற்றும் அவரது கூட்டாளிகளான கொம்பாக்கம் சிவசங்கர் (23), கோர்க்காடு ராஜா (23), கார்த்திகேயன் (23), தனத்து மேடு பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (25), கடலூர் கிளிஞ்சிகுப்பம் பிரதாப் (24), அரியாங்குப்பம் விக்னேஷ் (26) ஆகிய 7 போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
திருச்சி கோர்ட்டில் 7 பேர் சரண்
இந்தநிலையில் ரவுடி நித்தியானந்தம் உள்பட 7 பேரும் நேற்று திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 3-ல் சரண் அடைந்தனர். அவர்களை வருகிற 31-ந் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு பாலாஜி உத்தரவிட்டார். இதையடுத்து 7 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.