புதுக்கோட்டையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்
பருவமழை குறைவாக பெய்ததால் விவசாயம் பாதிப்படைந்த நிலையில் புதுக்கோட்டையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
நெல் கொள்முதல் நிலையங்கள்
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் பேசினர்.
இளஞ்செழியன்:- ``அரசின் நெல் கொள்முதல் நிலையங்கள் மாவட்டத்தில் சில இடங்களில் தேவையில்லாமல் திறக்கப்பட்டுள்ளது. அதனால் தேவையுள்ள இடங்களில் மட்டும் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்''.
விசுவநாதன்:- ``கன்னனி புதுவயலில் அரசின் நெல் கொள்முதல் நிலையம் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளிலும் கருவேல மரங்களை அகற்ற வேண்டும். தெற்கு வெள்ளாற்றின் பாசன வாய்க்கால்கள் மதகுகளையும் புனரமைக்க வேண்டும். மாவட்டத்தில் சாகுபடி செய்த சிறுதானிய பயிர்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்''.
வறட்சி மாவட்டமாக...
சண்முகம்:- ``100 நாள் வேலை திட்டத்தில் முறையாக வேலை வழங்கப்படுவதில்லை. இதில் முழுமையாக வேலை வழங்க வேண்டும்''. மாரிமுத்து:- ``மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை அதிகம் பெய்யவில்லை. விவசாயமும் அதிகம் நடைபெறவில்லை. விவசாயம் பாதிப்படைந்த நிலையில் புதுக்கோட்டையை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு நிவாரணம் பெற்றுத்தர வேண்டும். காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி பணியை விரைவுப்படுத்த வேண்டும். கவிநாடு கண்மாய் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்''.
கொக்குமடை ரமேஷ்:- ``கல்லணை கால்வாய் பகுதியில் அதிக நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். பொதுப்பணித்துறை அலுவலகத்தில் மீன் பாசி ஏல ரசீது போடுவது வெளிப்படையாக இருக்க வேண்டும். நெல் குவிண்டாலுக்கு ரூ.300 உயர்த்தி அறிவிக்க வேண்டும்.''
நிவாரணம் கிடைக்க வேண்டும்
செல்லத்துரை:- ``கருங்காடு அணை கட்டில் இருந்து பாம்பாறு வரை கால்வாய் அமைக்க முதல் கட்டமாக பொன்பேத்தி கால்வாய் வரை கால்வாய் அமைக்க கடந்த 2020-ம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் ரூ.10 கோடி அறிவிக்கப்பட்டது. இதற்கு அரசாணை பெற வேண்டும். காவிரியின் உபரிநீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க வெள்ளாற்றின் தென்பகுதிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.''
நடராஜன்:- ``வடகிழக்கு பருவ மழை சரியாக பெய்யாத நிலையில் விவசாயம் பாதித்ததால் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தில் நிவாரணம் கிடைக்க வேண்டும்..''
துரைமாணிக்கம்:- ``பொதுப்பணித்துறையினர் தற்போது குளங்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை இல்லாத இந்த காலக்கட்டத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.''
நில அளவையர்
தனபதி:- ``மாவட்டத்தில் கருவேல மரங்களை தூளாக்கும் எந்திரம் மூலம் அகற்ற வேண்டும். கரும்பு லாரிகளை அபராதமின்றி செல்ல அனுமதிக்க வேண்டும். பருவமழை மிகவும் குறைவாக பெய்ததால் விளைச்சல் இல்லாமல் போய்விட்டது. எனவே நமது மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். மாவட்டத்தில் வனத்தோட்ட கழகத்தின் மூலம் சாகுபடி செய்துள்ள தைல மரங்களை முற்றிலும் அகற்ற வேண்டும்.'' இதேபோல பட்டா மாறுதல், நில அளவையர் கூடுதலாக நியமித்து நில அளவை பணியை மேற்கொள்ளுதல் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதற்கு துறைவாரியாக அதிகாரிகள் பதில் அளித்தனர்.
கணக்கெடுப்பு
கலெக்டர் கவிதாராமு பதில் அளிக்கையில், ``ஆவுடையார்கோவில், மணமேல்குடி பகுதியில் வறட்சியால் பாதித்த இடங்களை ஆய்வு செய்து கணக்கெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நெல் அறுவடை எந்திரங்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதை தேவைப்பட்டால் மாற்றி அமைக்கப்படும். இந்த ஆண்டு உலக சிறுதானிய ஆண்டாக ஐ.நா. சபை அறிவித்துள்ள நிலையில், மாவட்டத்தில் சிறுதானியங்கள் உற்பத்தி, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை அதிகப்படுத்தல், ஆன்லைனில் சந்தைப்படுத்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். கருவேல மரங்கள் அகற்றப்படும். தேவையான இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்'' என்றார்.
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணியை 6 மாதத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளோம் என அத்திட்ட அதிகாரி ரம்யாதேவி தெரிவித்தார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் ராஜேந்திரபிரசாத், துணை கலெக்டர் (பயிற்சி) ஜெயஸ்ரீ, மத்திய கூட்டுறவு மேலாண்மை இயக்குனர் தனலட்சுமி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.