செப்டம்பர் 1-ந்தேதி முதல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்


செப்டம்பர் 1-ந்தேதி முதல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்
x

செப்டம்பர் 1-ந்தேதி முதல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்

திருவாரூர்

இந்த ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி முதல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

விழிப்புணர்வு ஊர்வலம்

திருவாரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், உலக தாய்ப்பால் வார விழா குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத்துறை வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது. பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தெய்வநாயகி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் ஜோஸ்பின் சகாய பிரமிளா, திருவாரூர் நகர்மன்ற குழு உறுப்பினர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேட்டி

பின்னர் அமைச்சர் சக்கரபாணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தினை குடிசையில்லா மாநிலமாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறார்.

திருவாரூர் மாவட்டத்தில் 58,721 பேர் குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். கலைஞர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் இந்த மாவட்டத்திற்கு முன்னுரிமை அளித்து கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 58,721 குடிசை வீடுகளும், மாடி வீடுகளாக மாற்றும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆதாரவிலை ரூ.100 உயர்த்தி கொள்முதல்

கியாஸ் இணைப்புகள் இல்லாத 82 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 34 ஆயிரம் பேருக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2060 ஆகவும், புது ரக நெல்லுக்கு ரூ.2015 ஆகவும் உயர்த்தி விவசாயிகளுக்கு வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த ஆண்டு செப்டம்பர் மாதமே அறுவடை காலம் தொடங்கப்பட உள்ளது. எனவே அன்று முதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும். நெல்லுக்கு ஆதார விலை ரூ.100 உயர்த்தி கொள்முதல் செய்யப்படும்.

இலவச தொலைபேசி எண்கள்

அனைத்து மாவட்டங்களிலும் நெல் கொள்முதல் தொடர்பாக புகார்களை தெரிவிக்க தனித்தனியே இலவச தொலைபேசி எண்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story