மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் மறியல் போராட்டம்
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி கும்பகோணத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணம்:
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி கும்பகோணத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊர்வலம்
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும், சமூக பாதுகாப்புடன் கூடிய வேலை வாய்ப்பு வழங்க கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கும்பகோணத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் நாகராஜன், மாநகரக்குழு செயலாளர் செந்தில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஊர்வலமாக கும்பகோணம் ரெயில் நிலையத்திற்கு வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு கீர்த்தி வாசன் தலைமையிலான போலீசார் ரெயில் நிலையத்திற்குள் செல்லாதவாறு இரும்பு தடுப்புகள் அமைத்து தடுத்தனர்.
இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ரெயில் மறியல்
இதை தொடர்ந்து போராட்டகாரர்கள் ரெயில் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.இதற்கிடையே மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்கள் ரெயில் நிலையத்திற்கு மற்றொரு வழியாக சென்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது கும்பகோணம் ரெயில் நிலையத்திற்கு மயிலாடுதுறையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற பயணிகள் ரெயில் என்ஜின் முன்பு தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தண்டவாளத்தில் இருந்து வெளியே கொண்டு வர போலீசார் முயன்றனர்.
தள்ளுமுள்ளு
அப்போது போராட்டகாரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ், போலீசார் செல்வம், ஜெகதீசன் ஆகியோரின் சீருடையில் கரை (கிரீஸ்) ஏற்பட்டது. இதனால் அவர்கள் சீருடை கருப்பு நிறத்தில் காட்சி அளித்தது. போராட்டகாரர்களின் சட்டையும் கிழிந்தது. போராட்டக்காரர்களை தண்டவாளத்தில் இருந்து வெளியேற்றிய பிறகு ரெயில் சுமார் 20 நிமிடங்கள் தாமதமாக அங்கிருந்து புறப்பட்டு திருச்சி நோக்கி சென்றது.ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 55-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
திருவிடைமருதூர்
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தபால் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்ளிட்ட 55 பேரை திருவிடைமருதூர் போலீசார் கைது செய்தனர்.
இதே போல் நாச்சியார்கோவில் பகுதியில் கடைவீதியில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 60 பெண்கள் உள்ளிட்ட 95 பேரை நாச்சியார் கோவில் போலீசார் கைதனர்.
பட்டுக்கோட்டை- ஒரத்தநாடு
பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 70 பேரை போலீசார் கைது செய்தனர்.அம்மாப்பேட்டை தலைமை தபால் அலுவலக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்பட 62 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
ஒரத்தநாடு தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 27 பேரை கைது செய்தனர். இதேபோல் திருவோணம் ஒன்றியம் ஊரணிபுரம் தபால் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்ட மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 24 பேரை போலீசார் கைது செய்தனர்.