1½ வயது குழந்தையை கண்காணிப்பு கேமரா உதவியுடன் மீட்ட ரெயில்வே போலீஸ்


1½ வயது குழந்தையை கண்காணிப்பு கேமரா உதவியுடன் மீட்ட ரெயில்வே போலீஸ்
x

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் 1½ வயது குழந்தையை கண்காணிப்பு கேமரா உதவியுடன் ரெயில்வே போலீசார் மீட்டனர். குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தபோது அங்கிருந்த பயணிகள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

சென்னை,

சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் நேற்று காலை இன்ஸ்பெக்டர் ரோகித்குமார் தலைமையிலான ரெயில்வே பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 1½ வயது குழந்தை ஒன்று தன்னந்தனியாக ரெயில் நிலைய வளாகத்தில் சுற்றிக்கொண்டிருப்பதை கண்காணிப்பு கேமராவில் ஏட்டு பாண்டியன் கவனித்தார்.

உடனடியாக அவர் ரெயில்வே பாதுகாப்பு படையினர், ரெயில்வே போலீஸ் மற்றும் குழந்தைகள் உதவி மையத்துக்கு தகவல் கொடுத்தார். விரைந்து செயல்பட்ட போலீசார், அந்த குழந்தையை மீட்டனர். பின்னர் ரெயில் நிலைய ஒலிபெருக்கி மூலம் தனியாக சுற்றித்திரிந்த பெண் குழந்தை ஒன்று தங்களிடம் இருப்பதாக அறிவித்தனர்.

கண்காணிப்பு கேமரா உதவியுடன்

ஆனாலும் குழந்தையின் பெற்றோர் வராததால், கண்காணிப்பு கேமராவின் உதவியுடன் பெற்றோரை போலீசார் தேடினர். இந்தநிலையில் சிறிது நேரத்துக்கு பிறகு பெற்றோரை கண்டுபிடித்து, அவர்கள் இருந்த இடத்துக்கு குழந்தையுடன் சென்றனர். குழந்தையை தொலைத்துவிட்டு, அதை ரெயில் நிலையத்தில் அங்குமிங்குமாக தேடிக்கொண்டிருந்த பெற்றோர், குழந்தையின் அழுகுரல் கேட்டவுடன் போலீசாரிடம் ஓடிவந்தனர்.

தாயைக் கண்டவுடன் நீண்டநேரமாக அழுது கொண்டிருந்த குழந்தையும் அழுகையை நிறுத்திவிட்டு ஒரே பாய்ச்சலாக தாயிடம் சென்றது. குழந்தையை மீண்டும் கண்ட மகிழ்ச்சியில் திக்குமுக்காடிய பெற்றோர் போலீசாருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

அரை மணி நேர போராட்டம்

இதுகுறித்து நடந்த விசாரணையில் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த வினோத்குமார்-லதா தம்பதியினர் தங்களது 1½ வயது பெண் குழந்தை ருத்விக் மற்றும் உறவினர்கள் 11 பேருடன் நேற்று காலை விஜயவாடா செல்வதற்காக சென்டிரல் ரெயில் நிலைய வளாகத்தில் காத்திருந்தனர்.

அப்போது யாரும் அறியாத நேரத்தில் அங்கிருந்து நகர்ந்த குழந்தை, ரெயில் நிலைய வளாகத்தில் கேட்டின் வெளியே சென்று சுற்றிக்கொண்டிருந்தது தெரியவந்தது. சுமார் ½ மணி நேர போராட்டத்துக்கு பிறகு குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிகழ்வு, பயணிகளிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


Next Story