சேலத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை-தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது


சேலத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை-தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது
x

சேலத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அழகாபுரத்தில் மின்னல் தாக்கியதில் தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது.

சேலம்

சேலம்:

சேலம் மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது. சேலத்தில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் ஓரளவு இருந்தது. இதனால் வெப்பத்தின் அளவு 97.4 டிகிரியாக பதிவானது. இந்த நிலையில் இரவு 7.30 மணி அளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

இந்த மழை சுமார் ½ மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. பின்னர் மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. மழையினால் மாநகரில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. மழையின் போது அழகாபுரம் பகுதியில் மின்னல் தாக்கி தென்னை மரம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது.

மழையின் போது பலத்த காற்று வீசியதால் பல இடங்களில் மரக்கிளைகள் ஒடிந்து விழுந்தன. இதனால் அந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. குறிப்பாக சேலம் மேயர் நகர் 7-வது தெருவில் காற்றுடன் கூடிய மழையால், மரம் சாய்ந்து விழுந்ததில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால் அந்த பகுதியில் மின்சாரம் தடைபட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.


Next Story