தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜ சோழனின் சதய விழா பந்தகால் நிகழ்வுடன் தொடங்கியது..!


தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜ சோழனின் சதய விழா பந்தகால் நிகழ்வுடன் தொடங்கியது..!
x

தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜ சோழனின் சதய விழா பந்தகால் நிகழ்வுடன் தொடங்கியது.

தஞ்சாவூர்,

தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

தஞ்சை பெரிய கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாமன்னன் ராஜராஜசோழன் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், மாமன்னன் ராஜராஜசோழனின் 1037-வது சதய விழா பந்தக்கால் முகூர்த்த நிகழ்ச்சியுடன் இன்று தொடங்கியுள்ளது.

ராஜராஜசோழனின் சதய விழாவை முன்னிட்டு வருகிற 2-ந்தேதி (புதன்கிழமை) பெரிய கோவில் வளாகத்தில் கவியரங்கம், கருத்தரங்கம், ஆன்மிக சொற்பொழிவு, பரிசளிப்பு விழா ஆகியவை நடைபெறவுள்ளது.

தொடர்ந்து 3-ந் தேதி காலை தேவாரநூலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, ஓதுவார்களின் வீதியுலா நடைபெறுகிறது. பின்னர் பெரிய கோவிலுக்கு அருகே உள்ள மாமன்னன் ராஜராஜசோழனின் சிலைக்கு கோவில் நிர்வாகம், மாவட்டம் நிர்வாகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.

அதனை தொடர்ந்து ராஜராஜசோழன், உலோகமாதேவி ஐம்பொன் சிலைகள் முன்பாக புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து சிவாச்சாரியார்கள் சிறப்பு யாகம் நடத்தி, பின்னர் பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட மங்கள பொருட்களால் பேரபிஷேகமும், மகா தீபாராதனையும் நடத்தவுள்ளனர். அன்று இரவு ராஜராஜசோழன் மற்றும் உலோகமாதேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வீதியுலா நடைபெறவுள்ளது.


Next Story