காளத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.5 கோடி நிலம் மீட்பு
காளத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.5 கோடி நிலம் மீட்கப்பட்டது.
பெரம்பலூர்
பெரம்பலூரை அடுத்த எசனை காளத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.5 கோடி மதிப்பிலான 6 ஏக்கர் மற்றும் 47 சென்ட் பரப்பளவிலான நிலம் 3 கிணறுகளுடன் பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் அரசலூர் கைகாட்டி அருகே உள்ளது. இந்த நிலத்தை 1931 முதல் ஒரு குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் ஆக்கிரமிப்பு செய்து, பயிரிட்டு வந்திருந்தனர். இந்துசமய அறநிலையத்துறையினர் காளத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான சொத்து ஆவண விவரங்களை ஆய்வு செய்து பார்த்தபோது நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் மனு அளிக்கப்பட்டு, அவரது உத்திரவின்பேரில் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்திவந்தனர். நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆக்கிரமிப்பை காலிசெய்துவிட்டு வெளியேறுமாறு நோட்டீசு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அறநிலையத்துறை உதவி ஆணையர் அரவிந்தன், தாசில்தார் பிரகாசம், கோவில் ஆய்வாளர் வினோத், காளத்தீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் தேவி ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த நிலத்தை மீட்டனர். அவ்வாறு மீட்கப்பட்ட நிலத்தின் முன் கோவிலுக்கு சொந்தமான நிலம் என்றும், ஆக்கிரமிப்பு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.