புதுக்கோட்டை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம்: முதல்-அமைச்சர் அறிவிப்பு
விபத்தில் பலத்த காயமடைந்தவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்
சென்னை ,
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுக்கா, நமணசமுத்திரம் அருகே திருச்சி காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலிருந்து மூன்று வெவ்வெறு நான்கு சக்கர வாகனங்களில் வெவ்வேறு கோவில்களுக்கு சென்றுக் கொண்டிருந்தவர்கள், தேநீர் அருந்துவதற்காக சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு தேநீர் அருந்திகொண்டிருந்தபோது, சிமெண்ட் ஏற்றிகொண்டு வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுக்கா, பனஞ்சேரியை சேர்ந்த ஜெகநாதன் மற்றும் சாந்தி, திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயில், எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன் மற்றும் சென்னை மாவட்டம், அமைந்தகரையைச் சேர்ந்த சதீஷ் ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள்.
மேலும் திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல், பாக்கியலட்சுமி நகர், அன்னை இந்திரா காந்தி தெருவைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிம் ரூபாயும் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.