ஓ.பன்னீர்செல்வத்தின் பதவி பறிப்பு: சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமனம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


ஓ.பன்னீர்செல்வத்தின் பதவி பறிப்பு: சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமனம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x

ஓ.பன்னீர்செல்வம் வகித்து வந்த சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் பதவிக்கு ஆர்.பி.உதயகுமாரை நியமித்து, எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரத்தில் குழப்பம் ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமி ஒரு அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் மற்றொரு அணியாகவும் பிரிந்து செயல்பட்டு வருகிறார்கள். உள்கட்சி மோதல் பூதாகரமாக வெடித்த நிலையில், கடந்த 11-ந்தேதியன்று நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

அதேசமயத்தில், அ.தி.மு.க.வின் கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் எதிராக செயல்பட்டதாக கூறி ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி மற்றும் அவர் அணியில் உள்ள மூத்த நிர்வாகிகளை நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வமும் பதிலுக்கு அறிவித்தார். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் மற்றொருவர்களின் ஆதரவாளர்களை போட்டிப்போட்டு நீக்கி வருகின்றனர்.

எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமியும், துணை தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் இருந்தனர். அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுள்ளதால், அவர் எந்த கட்சியும் சாராத எம்.எல்.ஏ.வாகவே கருதப்படுவார். அதனால் அவர் வகித்து வந்த எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியில் நீடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இதையடுத்து ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் சட்டப்பேரவை செயலாளரிடம் கடிதம் வழங்கப்பட்டது.

ஆர்.பி.உதயகுமார் நியமனம்

இதற்கிடையே கடந்த 17-ந்தேதியன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு? எப்படி வாக்களிக்க வேண்டும்? என்பது தொடர்பாக விவாதிக்கப்பட்ட கையோடு, சட்டமன்ற பேரவையின் துணை தலைவராக யாரை நியமிக்கலாம்? என்பது பற்றியும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், சட்டமன்ற பேரவையின் துணை தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் வகித்து வந்த சட்டமன்ற பேரவையின் துணை செயலாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.

சபாநாயகர் அலுவலகத்தில் கடிதம்

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதம் ஒன்றை அ.தி.மு.க. கொறடா எஸ்.பி.வேலுமணி நேற்று சபாநாயகர் அலுவலகத்தில் கொடுத்தார்.

அதில், 'சட்டமன்ற கட்சி துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமாரும், துணை செயலாளராக அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி பற்றி எந்த முடிவையும் சபாநாயகர் எடுக்கக்கூடாது என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஏற்கனவே சபாநாயகரிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.

எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து

எதிர்க்கட்சி துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆர்.பி.உதயகுமார், எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பின்னர் அவர் கூறுகையில், 'கட்சிக்கும், தலைமைக்கும் ஜெயலலிதா இருக்கும்போது விசுவாசமாக பணியாற்றியது போல் பணியாற்றுவேன்' என்று தெரிவித்தார்.


Next Story