வாரத்திற்கு 2 நாட்கள் மட்டுமே வர வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்


வாரத்திற்கு 2 நாட்கள் மட்டுமே வர வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 23 Sep 2022 6:45 PM GMT (Updated: 23 Sep 2022 6:46 PM GMT)

ஓட்டுனர் பயிற்சி பள்ளி மூலமாக உரிமம் பெற தேர்வுக்கு வருபவர்களை வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே அனுமதிப்பது என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகங்கை

ஓட்டுனர் பயிற்சி பள்ளி மூலமாக உரிமம் பெற தேர்வுக்கு வருபவர்களை வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே அனுமதிப்பது என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓட்டுனர் உரிமம்

முதல்-அமைச்சர், போக்குவரத்து துறை அமைச்சர், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் இணை செயலாளர் ஹரிபாலா பாலச்சந்தர், அனுப்பி உள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் 47 ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் உள்ளன. இந்த பயிற்சி பள்ளிகள் மூலமாக பொதுமக்கள், மாணவர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கு இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் ஆகியவைகளின் ஓட்டுநர் உரிமம் பெற்று தருவதுடன் கனரக வாகனங்களுக்கும் ஓட்டுனர் உரிமம் பெற்று தருகிறோம்.

இதற்காக முதலில் பழகுனர் உரிமம் பெற்றுக் கொடுத்து அதன் பின்னர் எங்களது சொந்த வாகனத்தில் அவர்களுக்கு பயிற்சி அளித்து பின்னர் சிவகங்கை மற்றும் காரைக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் முறையான தேர்வில் கலந்து கொள்ள வைத்து ஓட்டுனர் உரிமம் பெற்று தரப்படுகிறது.

ரத்து செய்ய வேண்டும்

இந்த நிலையில் போக்குவரத்து துறையில் இருந்து திடீரென்று ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் வாரத்தில் இரண்டு தினங்களுக்கு மட்டுமே ஓட்டுனர் தேர்வுக்கு வரவேண்டும் என்று அறிவித்துள்ளனர். ஓட்டுநர் உரிமம், கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற வருபவர்களில் 90 சதவீதம் பேருக்கு சொந்த வாகனம் இருக்காது. அவர்கள் பயிற்சி பள்ளி வாகனத்தை பயன்படுத்தியே தேர்வு எழுதி ஓட்டுனர் உரிமம் பெற முடியும்.

போக்குவரத்து துறை ஆணையாளரின் இது போன்ற சுற்றறிக்கையினால் அவர்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே இந்த உத்தரவை ரத்து செய்து, அனைத்து நாட்களுக்கும் ஓட்டுனர் பயிற்சி பள்ளியின் சார்பில் வருபவர்களுக்கு தேர்வு நடத்த அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

இது குறித்து சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன், மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம் ஆகியோரிடமும் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.



Next Story