அமைப்பு சாரா தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வேண்டுகோள்
அமைப்பு சாரா தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவிலான அமைப்பு சாரா தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடெங்கும் நடைபெற்று வரும் விழிப்புணர்வு பிரசார பயண கூட்டம் பெரம்பலூரில் நேற்று முன்தினம் நடந்தது. பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் காந்தி சிலை முன்பு அருகே நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு தேசிய அமைப்பு சாரா தொழிலாளர் சங்க கூட்டமைப்பு மற்றும் இந்திய பொது தொழிலாளர் பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக தேசிய அமைப்பு சாரா தொழிலாளர் சங்க கூட்டமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மற்றும் கட்டிட தொழிலாளர் பஞ்சாயத்து சங்கத்தின் தலைவருமான கீதா கலந்து கொண்டு பேசினார். 44 தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்களை ரத்து செய்து 4 தொகுப்பு சட்டங்களாக மாற்றியதை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இ-ஷ்ரம் தொழிலாளர்கள் கணக்கெடுப்பு திட்டத்தை மத்திய அரசு உடனே நிறுத்த வேண்டும். தேசிய அளவிலான அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்திட்டங்களுக்கு ஜி.எஸ்.டி.யில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 1 சதவீதம் லெவி கட்டாயம் வழங்கிட வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் வழங்கிட வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்துக்கு இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு கட்டாயம் அனுமதி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.