வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம் திறக்கப்பட்டது
தலைஞாயிறு வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம் திறக்கப்பட்டது
வாய்மேடு:
நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சிக்கு உட்பட்ட திருமாளம் பகுதியில் இயங்கி வந்த வருவாய் ஆய்வாளர் அலுவலகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் சேதமடைந்து இருந்தது. இதையடுத்து தனியார் வாடகை கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. தலைஞாயிறு வருவாய் ஆய்வாளர் அலுவலகம், 13 வருவாய் கிராமங்களுக்கு வருவாய் ஆய்வாளர் அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தலைஞாயிறு வருவாய் ஆய்வாளர் அலுவலகம் வாடகை கட்டிடத்தில் தான் இயங்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டு பூட்டிய நிலையில் இருக்கும் கட்டிடத்தை திறக்குமாறு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் புதிதாக கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு ஆத்மா குழு தலைவர் மகாகுமார், பேரூராட்சி முன்னாள் தலைவர்கள் சாந்தி சுப்பிரமணியன், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக வருவாய் ஆய்வாளர் பிரேம்நாத் வரவேற்றார். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் அஜய் ராஜா, அஜீஸ், ஊராட்சி மன்ற தலைவர்கள் வெங்கடாசலம், கற்பகம் நீலமேகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.