விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்
கள்ளக்குறிச்சிக்கு வருகிற 22-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தரவுள்ளார். இதையொட்டி விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடந்தது.
கள்ளக்குறிச்சி
பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், கோரிக்கை மனுக்களை பெறுதல் மற்றும் புதிய வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைப்பதற்காக வருகிற 22-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சிக்கு வருகை தரவுள்ளார்.
இதற்கான விழா கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தான் கை காட்டி அருகில் நடைபெற உள்ளது. இதையடுத்து அங்கு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ.வ.வேலு விழா நடைபெறும் இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடான ஆய்வுக்கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
இதற்கு அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். கலெக்டர் ஸ்ரீதர், சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், மணிக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில், விழா மேடை அமைப்பது, போக்குவரத்து வசதி மேற்கொள்ளுதல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடு உள்பட பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஏ்ற்பாடுகள்
முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு முதல் முறையாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கவும், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறுவதற்காகவும் வருகை தரவுள்ளார். எனவே அனைத்துத்துறை அலுவலர்களும் தங்கள் துறை சார்ந்த நலத்திட்ட உதவிகள், புதிய பணிகளுக்கான அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட பணிகளை விரைந்து தயார் செய்திட வேண்டும். விழாவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்புடன் போலீசார் மேற்கொள்ள வேண்டும்.
நலத்திட்ட உதவிகள் பெறவுள்ள பயனாளிகளின் தேர்வானது எவ்வித புகாருக்கும் இடமின்றி தகுதியானவர்களாக இருக்க வேண்டும். அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்றிட வேண்டும் என்றார். கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார், மாவட்ட வன அலுவலர் சுமித் சோமன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் தேவநாதன், கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், ஒன்றியகுழு தலைவர் அலமேலு ஆறுமுகம், நகரமன்ற தலைவர் சுப்ராயலு மற்றும் அனைத்து ஒன்றியக்குழு தலைவர்கள் மற்றும் அனைத்துத்துறை தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். முன்னதாக விழா நடைபெறும் இடத்தில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்ட போது தி.மு.க ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மாநில பொதுக்குழு உறுப்பினர் முருகன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, காமராஜ், வாணியந்தல் ஆறுமுகம், மடம்.பெருமாள் உள்பட பலர் உடன் இருந்தனர்.