தென்மேற்கு பருவமழையின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம்


தென்மேற்கு பருவமழையின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம்
x

தென்மேற்கு பருவமழையின் போது, மேற்கொள்ளப்படவேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

ஈரோடு

ஈரோடு

தென்மேற்கு பருவமழையின் போது, மேற்கொள்ளப்படவேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

தடுப்பணைகள்

பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறை சார்பில், தென் மேற்கு பருவமழையின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மதுபாலன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வெள்ளம் செல்ல கூடிய பகுதிகளில் நீர் தேக்கங்கள் மற்றும் கால்வாய்கள் தூர்வாரி சுத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் தடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவேண்டும். நீர் தேக்கிவைப்பதற்கான தடுப்பணைகள் பழுது ஏற்பட்டு இருப்பின் அதன் பழுதுகளை சரிசெய்ய வேண்டும்.

மருந்துகள் விவரப்பட்டியல்

சம்பந்தப்பட்ட துறைகள் கனமழையின் போது 24 மணி நேரமும் முறைப்பணி பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்நிலைகளில் நீர்வரத்து, நீர் இருப்பை கண்காணித்து நீர்வளத்துறை செயற்பொறியாளர்கள் உடனுக்குடன் உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அனைத்துறை அலுவலர்களும் 'TNSMART App' என்ற செயலியை தங்கள் செல்போனில் பதிவு செய்ய வேண்டும். மதகுகளையும், குறுக்கணைகளையும் சரிசெய்ய வேண்டும்.

மழைக்காலங்களில் மருத்துவமனைகளில் மருந்துகள் மற்றும் தேவையானவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கால்நடைகளுக்கு தேவையான மருந்துகள் சேகரித்து வைக்கப்பட வேண்டும். அவசரகாலத்தில் தேவையான மருந்துகளின் விவரப் பட்டியல் தயார் நிலையில் வைத்துக் கொள்ளவேண்டும்.

பாதுகாப்பு முகாம்கள்

அவசர காலத்தில் மருத்துவ அதிகாரிகள் மருத்துவ பணியாளர்களை குழுவாக அமைத்து பணிகளை மேம்படுத்த வேண்டும். குடிநீரில் சரியான அளவில் குளோரின் சேர்த்து வழங்க வேண்டும். பாதுகாப்பு முகாம்களின் பட்டியலை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

தீயணைப்புத்துறையின் சார்பில் அரசு அலுவலகங்கள், பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் வணிகவளாகங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் ஆகிய இடங்களில் அவசரகால செயல்பாடு குறித்த ஒத்திகை நடத்த வேண்டும்.

மழைமானி

தென்மேற்கு பருவமழையினால் ஏற்படும் பேரிடர் தொடர்பாக உடனுக்குடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் 1077, 0424-2260211 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும். மழைமானி நிலையங்களை சம்பந்தப்பட்ட ஆர்.டி.ஓ.க்கள் தணிக்கை செய்து மழைமானி நல்ல நிலையில் உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும் தென்மேற்கு பருவமழை காலங்களில் தாசில்தார்கள் மழைஅளவு மற்றும் இதர சேதங்கள் குறித்த அறிக்கையை ஒவ்வொரு நாளும் காலை 7 மணிக்குள் 1077 என்ற தொலைபேசி எண்ணிற்கு தவறாமல் தெரிவிக்க வேண்டும்.

தமிழ்நாடு மின்சார வாரியம் பருவமழை காலத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் சென்று தேவைப்படும் நேரங்களில் முக்கியமான இடங்களில் மின்சார இடையூறுகளை பழுதுபார்க்க 24 மணி நேரமும் அலுவலர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். தன்னார்வலர்கள் மற்றும் பேரிடர் கால காவலர்கள் தங்களது பகுதியில் மழை, புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தகவல்களை தெரிவிக்க ஏதுவாக தாசில்தார்களின் தொடர்பு எண்களை அவர்கள் இடத்தில் தெரிவிக்க வேண்டும்.

ஒருங்கிணைப்பு குழு

சாதாரண காலங்களில் மரம் நட்டுவளர்க்கவும் மற்றும் பேரிடர் காலங்களில் சூறாவளி காற்றினால் விழும் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தவும் அந்தந்த பகுதியை சேர்ந்த ஆர்வமுள்ள இளைஞர்கள், என்.எஸ்.எஸ்., என்.சி.சி., இளைஞர் குழுக்களை சேர்ந்தவர்கள் மற்றும் மரங்களை வெட்டி அப்புறப்படுத்த உரிய பயிற்சி பெற்ற நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, மின்வாரியத்துறை, பொதுப்பணித்துறை, ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சித்துறைகளில் உள்ள களப்பணியாளர்களையும், வட்ட அளவிலான தன்னார்வலர்கள் பட்டியல் தயார் செய்து வைத்துக்கொண்டு, பேரிடர் காலங்களில் வட்டார அளவிலான ஒருங்கிணைப்பு குழுவுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மதுபாலன் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) குமரன், ஆர்.டி.ஓ.க்கள் சதீஷ்குமார் (ஈரோடு), திவ்யபிரியதர்ஷினி (கோபி), பேரிடர் மேலாண்மைதுறை தாசில்தார் அஸ்ரப்நிஷா உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.


Related Tags :
Next Story