கோடையில் வெப்ப அலை வீசும் ஆபத்து: வெப்பத்தணிப்பு பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்


கோடையில் வெப்ப அலை வீசும் ஆபத்து: வெப்பத்தணிப்பு பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்
x

கோடையில் வெப்ப அலை வீசும் ஆபத்து இருப்பதால் வெப்பத்தணிப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

இந்தியாவில் பிப்ரவரி மாத வெப்பநிலை கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த மாதம் பதிவாகியிருப்பதாகவும், மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களில் மிகக்கடுமையான வெப்ப அலைகள் வீசக்கூடும் என்றும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தியாவின் பல மாநிலங்களில் இந்த காலத்தில் வெப்ப அலைகள் வீசக்கூடும். பல நேரங்களில் வெப்பநிலை வட இந்தியாவில் 49 டிகிரி செல்சியஸ் வரையிலும், தென் மாநிலங்களில் 43 டிகிரி செல்சியஸ் வரையிலும் உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

வெப்பநிலை உயர்வால் கோதுமை உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்படுவதுடன், மனிதர்களுக்கு எண்ணற்ற உடல் நல பாதிப்புகளும் ஏற்படக்கூடும்.

மின்சாரம்-குடிநீர்

வெப்ப அலைகளை எதிர்கொள்ள மக்களுக்கு தமிழக அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வெப்ப அலையால் பாதிக்கப்படும் மக்களுக்கும் மருத்துவம் வழங்குவதற்கான வசதிகள் அனைத்து மருத்துவமனைகளிலும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

போதிய எண்ணிக்கையில் 108 அவசர ஊர்திகள் தயார்நிலையில் வைத்திருக்கப்பட வேண்டும். கோடைக்காலத்தில் மின்சாரமும், குடிநீரும் தடையின்றி வழங்கப்படுவதை தமிழ்நாடு அரசுத் துறைகளும், உள்ளாட்சி அமைப்புகளும் உறுதி செய்ய வேண்டும்.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கோடை வெப்பம் அதிகரிக்கத் தொடங்கும் நிலையில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும். திறந்தவெளிகளில் மேற்கொள்ளப்படும் அனைத்து வகையான பணிகளுக்கும் தடை விதிக்கப்பட வேண்டும். அதனால், வாழ்வாதாரம் பாதிக்கப்படும் மக்களுக்கு நியாயவிலை கடைகள் மூலம் அரிசியுடன் மற்ற உணவு பொருட்களையும் அரசு இலவசமாக வழங்க வேண்டும்.

இனிவரும் ஆண்டுகளில் வெப்பநிலை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனை கருத்தில் கொண்டு, நீண்டகால வெப்பத்தணிப்பு பாதுகாப்பு திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story