நகைக்கடை ஊழியரிடம் கைவரிசை காட்டிய கொள்ளை கும்பல்


நகைக்கடை ஊழியரிடம் கைவரிசை காட்டிய கொள்ளை கும்பல்
x

நகைக்கடை ஊழியரிடம் கைவரிசை காட்டிய கொள்ளை கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

தஞ்சாவூர்

தஞ்சாவூர்

தஞ்சை மேலவீதியை சேர்ந்தவர் மணி(வயது 52). தற்போது சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் இவர், சென்னை என்.எஸ்.பி. ரோட்டில் உள்ள மொத்த நகை வியாபார கடையில் வேலை பார்த்து வருகிறார். திருச்சி, தஞ்சை, கும்பகோணம் பகுதிகளில் உள்ள நகைக்கடைகளுக்கு புதிய வகை மாடல் நகைகளை சென்னையில் இருந்து மணி கொண்டு வந்து விற்பது வழக்கம்.

7 கிலோ நகைகளுடன்...

அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து பஸ் மூலம் மணி திருச்சிக்கு வந்தார். அப்போது அவர், பையில் 7 கிலோ 200 கிராம் நகையை எடுத்து வந்தார். திருச்சியில் உள்ள சில நகைக்கடைகளில் புதிய வகை மாடல் நகைகளை விற்பனை செய்தார். அதற்கு பதிலாக ரொக்கப்பணம் மற்றும் உருக்கப்பட்ட நகைகளை வாங்கி கொண்டார். பின்னர் அவர் தஞ்சைக்கு வந்து இங்குள்ள விடுதியில் அறை எடுத்து தங்கினார்.

பின்னர் அவர், தஞ்சையில் உள்ள சில நகைக்கடைகளுக்கு சென்று புதிய வகை மாடல் நகைகளை விற்பனை செய்தார். இதற்கு பதிலாக ரொக்கப்பணம் மற்றும் உருக்கப்பட்ட நகைகளை வாங்கி கொண்டார்.பின்னர் நேற்று முன்தினம் இரவு தஞ்சையில் இருந்து சென்னைக்கு உழவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டு செல்வதற்காக தயாரான மணி தஞ்சை தெற்கு அலங்கத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிடுவதற்காக சென்றார்.

சீருடை அணிந்த நபர்கள்...

அப்போது அவர் எடுத்து வந்த பையில் 5 கிலோ புதிய வகை மாடல் நகைகள் மற்றும் 1 கிலோ 200 கிராம் உருக்கப்பட்ட நகைகள், ரூ.14 லட்சம் ரொக்கம் இருந்தது. தான் கொண்டு வந்த பையை மணி ஓட்டலில் உள்ள ஒரு நாற்காலியில் வைத்துவிட்டு சாப்பாட்டுக்கு பில் வாங்குவதற்காக சென்றார். அதற்குள் ஒரே நிறத்தில் சீருடை அணிந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அந்த ஓட்டலுக்குள் புகுந்தனர். அவர்கள் நகைகள் மற்றும் பணம் இருந்த பையை எடுத்து கொண்டு ஓட்டலை விட்டு வேகமாக வெளியே வந்தனர்.

ஆட்டோக்களில் தப்பிய மர்ம நபர்கள்

திடீரென சிலர் ஓட்டலுக்குள் வேகமாக வந்ததையும் பின்னர் ஓட்டலில் இருந்து வெளியே ஓடுவதையும் பார்த்த மணி சந்தேகம் அடைந்து தனது பை இருக்கிறதா? என பார்த்தார். அப்போது பையை காணாதது கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.ஓட்டலில் இருந்து வேகமாக வெளியே சீருடையுடன் சென்றவர்கள் தான் பையை எடுத்து சென்றதை அறிந்த அவர் வேகமாக வெளியே வந்து பார்த்தபோது அதற்குள் சீருடையுடன் வந்தவர்கள் 2 ஆட்டோக்களில் தப்பி சென்று விட்டது தெரிய வந்தது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து மணி தஞ்சை நகை வியாபாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் தஞ்சை மேற்கு போலீசாருக்கு வியாபாரிகள் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு கபிலன், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ஓட்டலின் கதவை பூட்டிக்கொண்டு உள்ளே இருந்து மணி மற்றும் ஓட்டலில் வேலை பார்த்தவர்களுடன் போலீசார் விசாரணை நடத்தினர்.

கண்காணிப்பு கேமரா காட்சிகள்

அந்த ஓட்டலில் இருந்த கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் தெற்கு அலங்கத்தில் உள்ள நிறுவனங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனர். அப்போது ஒரே மாதிரி வெள்ளைநிற சீருடையுடன் சிலர் நகைப்பையை எடுத்துக்கொண்டு வேகமாக ஓடுவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இது தொடர்பாக மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் சென்னையில் இருந்து 7 கிலோ 200 கிராம் தங்க நகைகளுடன் வந்த மணி, அவற்றில் 2 கிலோ 200 கிராம் நகைகளை கடைகளுக்கு கொடுத்ததும், அதன்மூலம் கிடைத்த உருக்கப்பட்ட தங்கம் 1 கிலோ 200 கிராம் மற்றும் ரூ.14 லட்சத்தை திருட்டுபோன பையில் வைத்து இருந்ததும் தெரிய வந்தது.

ஒரே மாதிரியான சீருடை

மேலும் தெற்கு அலங்கத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது சந்தேகத்துக்கிடமான வகையில் ஒரே மாதிரியான சீருடை அணிந்த 9 நபர்கள் வேக வேகமாக நடந்து செல்வதும், இவர்கள் அங்கிருந்து 2 ஆட்டோக்களில் புறப்பட்டு தஞ்சை பெரியகோவில் பகுதி வரை சென்று அங்கிருந்து வேறு வாகனத்தில் ஏறி தப்பி சென்று இருப்பதும் தெரிய வந்துள்ளது.-

இவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை. கொள்ளை போன நகையின் மதிப்பு சுமார் ரூ.2 கோடி இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.






Next Story