மீனவர்களிடம் கொள்ளை: அச்சமின்றி மீன் பிடிப்பதற்கான சூழலை ஏற்படுத்தவேண்டும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
மீனவர்களிடம் கொள்ளை: அச்சமின்றி மீன் பிடிப்பதற்கான சூழலை ஏற்படுத்தவேண்டும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
சென்னை,
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாகப்பட்டிணம் மாவட்டம். வேதாரண்யம் மீனவர்கள் 11 பேர் ஆறுகாட்டுத்துறை கடற்கரையில் இருந்து கடலில் மீன்பிடிக்கச்சென்றனர். அப்போது அங்கு வந்த இலங்கையைச்சேர்ந்த கடற்கொள்ளையர்கள் மீனவர்களை ஆயுதங்களால் தாக்கி அவர்களிடம் இருந்த ஆயிரம் கிலோ மீன்பிடி வலை, திசை காட்டும் கருவி, செல்போன்கள் போன்ற ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறித்துச்சென்றுள்ளனர்.
கொள்ளையர்களின் தாக்குதலால் மீனவர் பாஸ்கர் மற்றும் அருள்ராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் காயமடைந்த மீனவர்கள் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.
இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாதவாறு இந்திய கடற்படையும், இலங்கை கடற்படையும் தொடர் கண்காணிப்பில் ஈடுபடவேண்டும். தாக்குதலில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்க வேண்டும், மீனவர்கள் அச்சமின்றி மீன் பிடிப்பதற்கான சூழலை ஏற்படுத்தவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.