ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.12½ லட்சம் மோசடி


ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.12½ லட்சம் மோசடி
x

கிறிஸ்தவ அமைப்பின் பெயரில் போலி கடிதம் கொடுத்து, வேலை வாங்கி தருவதாக ரூ.12½ லட்சம் மோசடி செய்த தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி

ஆசிரியர் பணி

தேனி பங்களாமேடு பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் ராம்பிரசாத் (வயது 32). இவர் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறப்பட்டு இருந்ததாவது:-

நான் எம்.எஸ்சி., பி.எட். படித்துவிட்டு வேலை தேடிக் கொண்டு இருந்தேன். கடந்த 2019-ம் ஆண்டு எனது நண்பர் ஒருவர் மூலம், மதுரை தனக்கன்குளம் பகுதியை சேர்ந்த பிரேம்ஆனந்த், அவருடைய மனைவி பரமேஸ்வரி என்ற மேரி நித்யா ஆகியோர் அறிமுகம் ஆகினர்.

பிரேம் ஆனந்த் ஒரு கிறிஸ்தவ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆலோசகராக இருப்பதாகவும், அவருடைய மனைவி டி.கல்லுப்பட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் துணை விரிவுரையாளராக இருப்பதாகவும் கூறினர். மேலும், கிறிஸ்தவ அமைப்பில் இருந்து பலருக்கு வேலை வாங்கி கொடுத்துள்ளதாகவும் கூறினர்.

வத்தலக்குண்டுவில் உள்ள ஒரு பள்ளியில் கணித ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளதாகவும், ரூ.10 லட்சம் கொடுத்தால் அந்த பணியை வாங்கி கொடுப்பதாகவும் அவர்கள் ஆசை வார்த்தை கூறினர். அதை நம்பிய நான் முன்பணமாக ரூ.3 லட்சத்தை அவர்களிடம் கொடுத்தேன்.

தம்பதி மீது வழக்கு

பின்னர் அவர்கள் கிறிஸ்தவ திருச்சபையில் எனது வேலைக்கு தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாக கிறிஸ்தவ அமைப்பின் பெயரில் ஒரு கடிதத்தை கொடுத்தனர். அதை நம்பி மேலும் ரூ.2 லட்சத்தை பல தவணைகளில் அவர்களின் வங்கி கணக்கில் அனுப்பி வைத்தேன். ஆனால், வேலை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி விட்டனர். அந்த கடிதம் போலி என்பது தெரியவந்தது.

என்னை போன்று டி.பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்த ராஜேஷ் என்பவரிடம் ரூ.2 லட்சம், உத்தமபாளையத்தை சேர்ந்த ராஜா என்பவரிடம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம், தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் தாப்பாத்தி பகுதியை சேர்ந்த பெருமாள்சாமி என்பவரிடம் ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ.12 லட்சத்து 50 ஆயிரத்தை வாங்கி கொண்டு வேலை வாங்கித் தராமல் மோசடி செய்து விட்டார். எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில், இந்த மோசடி குறித்து பிரேம் ஆனந்த், அவருடைய மனைவி பரமேஸ்வரி என்ற மேரி நித்யா ஆகிய 2 பேர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் உமாதேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.




Next Story