ரூ.20 கோடியில் எல்.இ.டி.விளக்குகள் அமைக்கப்படும்


ரூ.20 கோடியில் எல்.இ.டி.விளக்குகள் அமைக்கப்படும்
x

ஓசூர் பகுதிகளில் ரூ.20 கோடியில் எல்.இ.டி.விளக்குகள் அமைக்கப்படும் என்று மாநகராட்சி கூட்டத்தில் மேயர் சத்யா தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

மாநகராட்சி கூட்டம்

ஓசூர் மாநகராட்சி சாதாரண கூட்டம் கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் எஸ்.ஏ.சத்யா தலைமை தாங்கினார். துணை மேயர் ஆனந்தய்யா, ஆணையாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் எஸ்.நாராயணன், மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ், சங்கர் என்ற குபேரன், ஸ்ரீதரன், சிவராம், மஞ்சுநாத் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஆணையாளர் பாலசுப்பிரமணியன் பேசுகையில், மாமன்ற கூட்டம், இனி ஒவ்வொரு மாதமும், 10-ந் தேதிக்குள் நடத்தப்படும். இந்த மன்றத்தில், நல்ல கண்ணியமான மரபுகளை உருவாக்கி செல்வோம். அரசியல் சாசன மாண்பை கட்டிக்காக்க வேண்டும். அனைத்து உறுப்பினர்களும், தங்கள் கருத்துக்களை, வார்டு பகுதி பிரச்சினைகளை பதிவு செய்ய வேண்டும். மன்ற கூட்டத்தில் பேசுவதற்கு மொழி, ஒரு தடையல்ல. உறுப்பினர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் எந்த மொழியிலும் பேசலாம் என்றார்.

அண்ணா பெயர்

பின்னர் மேயர் சத்யா பேசுகையில், ஓசூர் மாநகராட்சியின் கூட்ட அரங்கத்திற்கு பேரறிஞர் அண்ணா மாமன்ற கூட்டரங்கம் என்ற பெயர் சூட்ட அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதனை, அ.தி.மு.க. உறுப்பினர்களும் வரவேற்றதை அடுத்து, அண்ணா பெயர் சூட்டும் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பகுதிகளில் நிலவும் பிரச்சினைகள், நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்து பேசினர்.

தொடர்ந்து அவர் பேசுகையில், மாநகராட்சி நிதி, அனைத்து வார்டுகளுக்கும் சமமாக பிரித்து பாரபட்சமின்றி பணிகள் வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதியில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். ஓசூர் பகுதிகளில், ரூ.20 கோடி மதிப்பில் எல்.இ.டி. விளக்குகள் விரைவில் அமைக்கப்படும். ஓசூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்ள உள்விளையாட்டரங்கில், பெண்கள் டென்னிஸ், பேட்மிட்டன் விளையாட தனி நேரம் ஒதுக்கப்படும் என்றார். கூட்டத்தில் மன்றத்தின் அனுமதிக்கு வைக்கப்பட்டிருந்த 174 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story