ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு ரூ.3,000 விநியோகமா? மக்களிடையே ரூ.500 நோட்டுகள் அதிகளவில் புழக்கம் என தகவல்


ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு ரூ.3,000 விநியோகமா?   மக்களிடையே ரூ.500 நோட்டுகள் அதிகளவில் புழக்கம் என தகவல்
x

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு தலா ரூ.3000 விநியோகம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடக்கிறது. தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் தவிர சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். 77 பேர் தேர்தல் களத்தில் உள்ளதால் பிரசாரம் அனல் பறந்து வருகிறது. 25-ந்தேதி மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது.

பிரசாரம் நிறைவடைய இன்னும் 2 நாட்களே உள்ளதால் தலைவர்கள் தொகுதியில் முகாமிட்டு தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வருகிற 24, 25-ந்தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். அதே நாளில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பிரசாரம் செய்கிறார்.

தற்போது பிரேமலதா விஜயகாந்த், சீமான் ஆகியோரும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளதால் தொகுதியில் பறக்கும் படையினர், போலீசார், துணை ராணுவத்தினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.

மேலும் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பணம் விநியோகம் தொடர்பாக வரும் புகார்கள் மீதும் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். நேற்று முன்தினம் வாக்காளர்களுக்கு குக்கர், வெள்ளி கொலுசு, பட்டுபுடவை, பணம் வழங்கியதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து வீடியோவும் சமூக வலைதளத்தில் வெளியானதும் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு தேர்தல் அதிகாரிகள் சென்று கண்காணித்தனர். ஆனால் யாரும் அங்கு இல்லை. இந்த நிலையில் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் விநியோகம் செய்தது தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் தேர்தல் நெருங்க நெருங்க, வாக்காளர்களுக்கு பணம்பட்டுவாடா செய்யப்படலாம் என்பதால் ஈரோடு கிழக்கு தொகுதியின் அனைத்து பகுதிகளிலும் உள்ளூர் போலீசார் மற்றும் துணை ராணுவனத்தினர் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு உள்ளனர்.

இதே போல் விடிய விடிய, பறக்கும் படையினர், நிலைக்குழுவினர் 24 மணி நேரமும் கண்காணித்து வந்தனர். இந்த கண்காணிப்புகளை மீறி நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை விடிய விடிய வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதில் ஒரு கட்சி சார்பில் ஒரு ஓட்டுக்கு ரூ.3 ஆயிரமும், மற்றொரு கட்சி சார்பில் ஒரு ஓட்டுக்கு ரூ.2 ஆயிரமும் பட்டுவாடா செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மொத்தம் ஒரு ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் வரை விநியோகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதே போல் சில இடங்களில் ஒரு கட்சி ஒரு ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் வரை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. சில இடங்களில் பரிசு பொருட்கள் வாரி வாரி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு பகுதியில் பரிசுப்பொருட்களுடன் மட்டன், சிக்கனும் கொடுத்து இருக்கிறார்கள். இந்த பரிசு-பண மழையால் வாக்காளர்கள் இன்ப அதிர்ச்சிக்குள்ளாகி திக்குமுக்காடினார்கள் என்று தெரிய வந்துள்ளது.

இன்று அதிகாலை 4.30 மணிக்குள் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்து முடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 5 பேர் உள்ள ஒரு குடும்பத்துக்கு 2 கட்சிகளிடம் இருந்து ரூ.25 ஆயிரம் வரை கிடைத்துள்ளது. இதுதவிர பணத்துடன் வேட்டி, சேலையும் விநியோகம் செய்து உள்ளனர். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் பண மழையில் நனைந்து வருகிறார்கள். வாக்காளர் பட்டியலை வைத்துக்கொண்டு ஜீவானந்தம் வீதி, கள்ளுக்கடை மேட்டில் பணம் தருவாக குற்றம்ச்சாட்டு எழுந்துள்ளது.

இரவு முழுவதும் பணம் விநியோகம் செய்ததால் மக்கள் கையில் பணப்புழக்கம் அதிகரித்து உள்ளது. இதனால் மளிகை கடைகள், கறிக்கடைகள், மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. அனைவரிடமும் 500 ரூபாய் நோட்டுகள் அதிகளவில் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் உள்ளது. ஏற்கனவே பிரசாரத்துக்கு சென்று வருபவர்களுக்கு தினமும் ரூ.1000 வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


Next Story