ரூ.5 கோடி நிலக்கரி மோசடி; ஒருவர் கைது


ரூ.5 கோடி நிலக்கரி மோசடி; ஒருவர் கைது
x
தினத்தந்தி 26 Aug 2023 12:15 AM IST (Updated: 26 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் ரூ.5 கோடி நிலக்கரி மோசடி செய்ததாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோட்டை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 53). இவர் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் நிலக்கரி இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறேன். நான் தூத்துக்குடி சிவந்தாகுளத்தை சேர்ந்த லாசர் மகன் ராஜேஷ் கண்ணா (41), சிவக்குமார், ஜெயபாண்டி ஆகியோருடைய நிறுவனத்துக்கு கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை ரூ.11 கோடி மதிப்பிலான நிலக்கரியை விற்பனை செய்தேன்.

அதில் ராஜேஷ் கண்ணா ரூ.6 கோடி பணத்தை என்னிடம் தந்து விட்டார். மீதமுள்ள ரூ.5 கோடியை தராமல் காலம் தாழ்த்தி வந்தார். இந்த நிலையில் ராஜேஷ்கண்ணா உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து நிலக்கரியை முறைகேடாக விற்பனை செய்து விட்டு ரூ.5 கோடியை தராமல் மோசடி செய்தது தெரியவந்து உள்ளது. எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, ராஜேஷ் கண்ணாவை நேற்று கைது செய்தார். மேலும் ஜெயபாண்டி, சிவக்குமார் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story