திருமண ஆசை வார்த்தை கூறி பெண்ணிடம் ரூ.50 லட்சம் பெற்று கார் டிரைவர் மோசடி
திருமண ஆசை வார்த்தை கூறி பெண்ணிடம் ரூ.50 லட்சத்தை பெற்று மோசடி செய்த கார் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார்.
ஈரோடு:
திருமண ஆசை வார்த்தை கூறி பெண்ணிடம் ரூ.50 லட்சத்தை பெற்று மோசடி செய்த கார் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார்.
ரூ.50 லட்சம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாலன் நகரை சேர்ந்த அரசு பள்ளிக்கூடத்தின் ஓய்வு பெற்ற தலைமை ஆசிாியை ஆரோக்கியமேரி (வயது 60), ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-
ஈரோடு மாவட்டம் சிவகிரி கருக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த 28 வயதான கார் டிரைவர் ஒருவர், எங்களது உறவினர் மூலம் எங்களுக்கு அறிமுகமாகி, கொரோனா காலத்தில் எங்களது காருக்கு டிரைவாக வேலை பார்த்து வந்தார். அந்த வாலிபர் எனது மகளிடம் திருமண ஆசை வார்த்தை கூறி பழகினார். அவரது தங்கைக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும், அதற்கு பணம் தேவை என கூறி எனது மகளின் மூலமாக எங்களிடம் இருந்து பணம், நகை என மொத்தம் ரூ.50 லட்சத்தை பெற்று கொண்டார்.
மோசடி
மேலும் எங்களுக்கு சொந்தமான காரினையும் அவர் எடுத்து வந்து போலி ஆவணங்கள் தயாரித்து, பெயர் மாற்றம் செய்து ஈரோட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.10 லட்சத்திற்கு அடமானம் வைத்துள்ளார். வாங்கிய பணத்தை இதுவரை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்து விட்டு தகாத வார்த்தைகளால் பேசிவருகிறார்.
மேலும் அந்த வாலிபர் செல்போன் மூலம் எனது மகளுக்கு பாலியல் தொந்தரவும் கொடுக்கிறார். பணம் கேட்டு தொந்தரவு செய்தால் மகளின் போட்டோவை வெளியிடுவேன் எனவும், என் சாவுக்கு நீங்கள் தான் காரணம் என எழுதி வைத்து தற்கொலை செய்து கொள்வேன் எனவும் மிரட்டல் விடுத்து வருகிறார். எனவே, உரிய விசாரணை நடத்தி, டிரைவர் மீது நடவடிக்கை எடுத்து, எங்களது பணம், நகை, கார் போன்றவற்றை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.